Published : 01 Jan 2019 03:38 PM
Last Updated : 01 Jan 2019 03:38 PM

உ.பி.யை அதிரவைத்த தன்பாலினத் திருமணம்: 6 ஆண்டுகள் போராடி கணவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்ற இளம் பெண்கள்

உத்தரப் பிரதேசத்தில் 6 ஆண்டுகள் போராடி தங்கள் கணவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்ற இரண்டு இளம் பெண்கள்  இருவர் தன்பாலினத் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறையற்ற பாலியல் உறவு சட்டரீதியாக தவறானது அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் தங்கள் திருமணத்தை சட்டரீதியாகப் பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 24 வயது இளம் பெண்கள் இருவர் கல்லூரி நாட்களில் இருந்து ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வந்துள்ளனர். கல்லூரிப் படிப்பு முடிந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.  இதைக் கேட்டு அவர்களது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது சமூகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதுடன் இந்தியாவில் சட்டம் அங்கீகாரம் இல்லை எனக் கூறியுள்ளனர். தங்கள் மகள்களுக்கு மணமகனைத் தேடி கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் திருமணத்துக்குப் பிறகும் இளம் பெண்கள் இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். தங்கள் கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பமின்றி நாட்களைக் கடத்தி வந்துள்ளனர். திருமணம் ஆன சிறிது காலத்திலேயே கணவனைப் பிரிந்து வாழ்ந்த அவர்கள் இருவரும் தனித்தனியே தங்கள் கணவர்களிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இவர்களின் விவாகரத்து வழக்கு ஏறக்குறைய 6 ஆண்டுகள் நடந்து வந்தது. இவர்களுக்கு விவாகரத்து வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் இருந்ததால் வழக்கு நீண்ட காலம் நடைபெற்றது. பின்னர் நீதிமன்றம் சட்ட ரீதியாக விவகாரத்து வழங்கியது. முறையற்ற பாலியல் உறவு சட்டரீதியாக தவறானது அல்ல என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளதால் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

தங்கள் நிலையை நண்பர்கள் சிலருக்கு விளக்கிக் கூறி ஆதரவு கோரியுள்ளனர். நண்பர்களின் உதவியுடன் இரு தினங்களுக்கு முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி பதிவாளரை அணுகினர்.

முறையற்ற உறவு சட்ட ரீதியாக தவறானது அல்ல என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ள போதிலும், இதற்கான சட்டம் இன்னமும் இயற்றப்படாததால் திருமணத்தைப் பதிவு செய்ய வாய்ப்பில்லை எனக் கூறி உள்ளூர் பதிவாளர் மறுத்து விட்டார். இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால் மட்டுமே அவர்களது திருமணத்தைப் பதிவு செய்ய முடியும் என பதிவாளர் கூறி விட்டார். எனினும் சட்ட ரீதியாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x