Published : 24 Jan 2019 03:29 PM
Last Updated : 24 Jan 2019 03:29 PM

தெலுங்குதேசத்துடன் கூட்டணி முறிந்தது: ஆந்திராவில் தனியாக நிற்க காங்கிரஸ் முடிவு

ஆந்திர மாநிலத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடாது என்று அந்த கட்சி  அறிவித்துள்ளது.

பாஜவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் முடிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இருந்துவரும் நிலையில், இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த தெலுங்குதேசம் கட்சி கடந்த ஆண்டு பிரிந்து எதிராகச் செயல்பட்டு வருகிறது. தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன், சேர்ந்து தெலுங்குதேசம் கட்சி போட்டியிட்டது. இதில் தெலுங்குதேசம் 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 19 இடங்களையும் வென்றது.

ஆந்திர மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அறிவித்த நிலையில் இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கானா உருவாக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான். இப்போது காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலையும், மக்களவைத் தேர்தலையும் சந்திப்பது தெலுங்குதேசம் கட்சிக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே கூட்டணி குறித்து நேற்று முன்தினம் , ராகுல் காந்தியைச் சந்தித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்திவிட்டுத் திரும்பினார். இந்தச் சூழலில் தெலங்குதேசம் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆந்திர மாநிலத்துக்குப் பொறுப்பாளருமான உம்மன் சாண்டி கூறியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், 175 தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்.

மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளிலும் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் வரும 31-ம் தேதி விஜயவாடாவில் சந்திக்க இருக்கிறோம். அப்போது இறுதிமுடிவு எடுக்கப்போம்.

 காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றவர்களை கட்சி மீண்டும் அழைக்கிறது. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரகுவீரரெட்டி தலைமையில் பிப்ரவரி மாதம் மாநில அளவில் பஸ் யாத்திரை செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தை காங்கிரஸ் கட்சியால் மட்டும் பெற்றுத்தர முடியும் என்பது மக்களுக்குத் தெரியும். காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தாக ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்து கையொப்பம் போடப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

இவ்வாறு உம்மன் சாண்டி தெரிவித்தார்.

அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்துவிட்டீர்களா என நிருபர்கள் உம்மன் சாண்டியிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், “ என்னுடைய தலைமை என்பது காங்கிரஸ் மட்டுமே, தெலுங்குதேசம் கட்சி கிடையாது. அவர்களிடம் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் என். ரகுவீர ரெட்டி கூறுகையில், “ தெலங்குதேசம் கட்சியுடன் கூட்டணியை முறித்து காங்கிரஸ் செயற்குழு ஒருமித்த முடிவு எடுத்துள்ளது. ராகுல் காந்தியிடமும் தெரிவிக்கப்பட்டது.

 பாஜகவுக்கு எதிராகத் தேசிய அளவில் பிப்ரவரி 1-ம் தேதி பந்த் நடத்த பாஜக அல்லாத கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான முடிவு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்டது. உயர்சாதி பிரிவினருக்காகவும், அவர்களுக்கான திட்டங்களுக்காகவும் லட்சம்கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் “ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை தெலுங்குதேசம் கட்சியின் முன்னாள் தலைவர் கண்ணுமுரி பாபிராஜு வரவேற்றுள்ளார். தனியாக டிடிபி கட்சி போட்டியிடுவதன் மூலம் மேலும் வலிமையடையும் எனத் பாபிராஜு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x