

கேரளாவில், கடந்த இரு நாட்களாக நடந்துவரும் போராட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 100 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பத்திரிக்கையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
40 வயதுகளில் உள்ள இரு பெண்கள் சபரிமலை கோயிலில் நுழைந்து தரிசனம் செய்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததையொட்டி கேரளா முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பெண்கள் உட்பட சுமார் 100 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இவ்வன்முறைச் சம்பவங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''நேற்றிலிருந்து நடைபெற்றுவரும் போராட்டங்களில் பெண்கள் உள்ளிட்ட ஊடகத்தினர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். போராட்டத்தை நடத்திய சங் பரிவார் அமைப்பினர் பத்திரிகையாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி அவர்களே சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக்கொண்டுள்ளனர்.'' எனக் கூறினார்.
கேரளா யூனியன் ஆப் ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்ஸ் தலைவர் வி.சுரேஷ் இதுகுறித்து ஐஏஎன்ஸ்ஸிடம் தெரிவிக்கையில்,
''புதன்கிழமையிலிருந்து பத்திரிகையாளர்கள் சங் பரிவார் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 100 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் பத்திரிகையாளர்கள் கடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஊடகத்தினரின் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை நாங்கள் சேகரித்துள்ளோம். இதனை போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளோம். மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை இன்று ஏற்பாடு செய்துள்ள பத்திரிகையாளர் கூட்டத்தையும், சங் பரிவார் நடத்தும் நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்க முடிவுசெய்துள்ளோம்'' என்றார்.
இதுகுறித்து கேரள மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா கூறுகையில், ''இந்த தாக்குதலை தீவிரமாகவே நாங்கள் பார்க்கிறோம். நிச்சயம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க காவல் உயரதிகாரிகள் அடங்கிய தனிக் குழுவை அமைக்கும்படி அனைத்து மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.