

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவரும், அவசரநிலை காலகட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடியவருமான மூத்த அரசியல்வாதி ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1998-ம் ஆண்டு முதல் 2004 வரையிலான முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அதைத் தவிர்த்து தொலைத்தொடர்புத்துறை, தொழில்துறை, மற்றும் ரயில்வே துறை அமைச்சராகவும் பெர்னாண்டஸ் இருந்துள்ளார். கடந்த 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இவர் பணியாற்றி உள்ளார்.
வாஜ்பாய் அரசு சென்ற பின் மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த 2009 முதல் ஜூலை 2010-ம் ஆண்டுவரை இருந்தார். அதன்பின் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார் பெர்னாண்டஸ்.
அதன்பின் நீண்ட நாட்களாக அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த பெர்னாண்டஸ் சமீபத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலமானார்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஜான் ஜோசப் பெர்னாண்டஸ் -ஆலிஸ் மார்த்தாவின் மகனாக 1930 ஜூன் 3-ம் தேதி ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தார். பெற்றோரின் விருப்பப்படி கிறிஸ்தவ வேதக் கல்வி பயின்று மதகுருவாகப் பணியாற்றினார். புரட்சிகர எண்ணம் கொண்ட அவரால் அந்தப் பணியில் நீடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதன் காரணமாக சோஷலிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரானார். சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உயர்ந்தார்.
கடந்த 1967 மக்களவைத் தேர்தலில் சம்யுக்த சோஷலிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.கே.பாட்டீலைத் தோற்கடித்தார். கடந்த 1975-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். பல அரசியல் தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1976-ம் ஆண்டு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். அப்போது வெளிப்படையாகவே இந்திரா காந்தியை கடுமையாக விமர்சித்து, நெருக்கடி நிலையை எதிர்த்தார்.
அதன்பின் நடந்த நடாளுமன்றத் தேர்தலில் பிஹார் மாநிலத்தின் முசாபூர் தொகுதியில் சிறையில் இருந்தவாறே விண்ணப்பித்துப் போட்டியிட்டு 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வெற்றிபெற்றார்.
இந்திரா காந்தி தோல்வியைத் தழுவி ஜனதா கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற மொரார்ஜி தேசாய் அரசில் மத்திய அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி வகித்தார். பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். காஷ்மீர் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பணியாற்றிய போது காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாஜ்பாய் அரசில் பாகிஸ்தானுடன் கார்கில் போர் நடந்தபோது அதை முன்னின்று நடத்தி வெற்றிப் பெற்றுக்கொடுத்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். மேலும் அணு விஞ்ஞானியும், குடியரசு முன்னாள் தலைவருமான அப்துல்கலாம் துணையுடன், பொக்ரானில் அணுகுண்டு சோதனையையும் பெர்னாண்டஸ் நிகழ்த்திக் காட்டினார்.
அதன்பின் 2004-ம் ஆண்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கி ஊழல் குற்றச்சாட்டு பெர்னாண்டஸ் மீது சுமத்தப்பட்டது. இதில் 2 முறை விசாரணையை எதிர்கொண்டு அரசியலில் இருந்து விலகத் தொடங்கினார். வாஜ்பாய் அரசு சென்ற பின் மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த 2009 முதல் ஜூலை 2010-ம் ஆண்டுவரை இருந்தார். அதன்பின் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார் பெர்னாண்டஸ்.