70 ஆண்டுகளில் ஒரு துறவிக்கு கூட  பாரத ரத்னா விருது கொடுக்காதது துரதிருஷ்டம்: பாபா ராம் தேவ் வேதனை

70 ஆண்டுகளில் ஒரு துறவிக்கு கூட  பாரத ரத்னா விருது கொடுக்காதது துரதிருஷ்டம்: பாபா ராம் தேவ் வேதனை
Updated on
1 min read

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் ஒரு துறவிக்கு கூட இதுவரை உயர்ந்த குடிமகனுக்கு வழங்கப்படும்  பாரத ரத்னா விருது வழங்காதது துரதிருஷ்டம்,  நாட்டுக்கு சன்யாசிகள் செய்துள்ள சேவைகளை எண்ணி அவர்களுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று யோகா குரு பாபா ராம் தேவ் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளையும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் அறிவித்தது. அதில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் மற்றும் இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இது குறித்து தற்போது வாரணாசியில் இருக்கும் யோகா குரு பாபா ராம் தேவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது. விருதுக்காக அறிவிக்கப்பட்டவர்களை நான் மதிக்கிறேன், அவர்களின் சேவைகள், பணிகள் ஆகியவற்றுக்கு அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளதை ஏற்கிறேன். விளையாட்டு வீரர்களுக்கும், கலைஞர்களுக்கும பத்ம விருதுகள், பாரத ரத்னா விருதுகள் அளிக்கும் போது, ஏன் துறவிகளுக்கு அளிக்கப்படுவதில்லை. சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர் இந்த சமூகத்துக்கு அளித்த பங்களிப்புகளைக் காட்டிலும், அரசியல்வாதிகள், கலைஞர்கள் பங்களிப்பு செய்துவிட்டார்களா

அன்னை தெரஸாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது அரசு. ஏனென்றால் அவர் கிறிஸ்துவர். ஆனால்,  சாதுக்களுக்கும், துறவிகளுக்கும் பாரத ரத்னா விருது இல்லை. ஏனென்றால் அவர்கள் இந்துக்கள். நாட்டில் இந்துவாக இருப்பது குற்றமாக இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சன்யாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.

 சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி சுவாமி, சிவக்குமார சுவாமி ஆகியோருக்கு ஏன் வழங்கப்படவில்லை. இந்த துறவிகள் சமூகத்துக்கு ஏராளமான சேவைகளையும், நற்பணிகளையும் செய்துள்ளார்கள், இவர்களுக்கு கண்டிப்பாக பாரத ரத்னா அறிவிக்க வேண்டும். இந்து துறவிகள் ஏராளமானோர் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி அளித்து வருகிறார்கள். ஆதலால் இந்து துறவிகள் சமூகத்துக்கு அளித்துள்ள பங்களிப்பை நினைத்து அவர்களுக்கு விருது அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு பாபா ராம் தேவ் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in