

பிரிவினைவாதிகள் அழைப்புக்கிணங்க காஷ்மீரில் கடையடைப்பு நடைபெற்றதால் அங்கு இயல்பு வாழ்க்கை இன்று பாதிக்கப்பட்டது. குடியரசு தினத்தை கருப்பு நாளாக அனுசரிக்கும்படி அவர்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து உயரதிகாரிகள் தெரிவித்ததாவது:
இன்று பிரிவினைவாதிகள் அழைப்புக்கிணங்க அரசுப் போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் ஸ்ரீநகரில் கடைகள், அரசு அலுவலகங்கள், பெட்ரோல் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியனவும் மூடப்பட்டிருந்தன.
இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டே இவ்வேலை நிறுத்தத்தின் பாதிப்புகள் என்பது மிகவும் வெளிப்படையானது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ள இடங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருந்தது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பான்மையான நகரங்களில் இந்த வேலை நிறுத்தம் அனுசரிக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும், குடியரசு நாள் கொண்டாட்டங்கள் எந்தவித இடையூறுமின்றி அமைதியாக நடந்தன.
இவ்வாறு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
'காஷ்மீர் பிரச்சினை விரைந்து தீர்க்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையோடு பிரிவினைவாதிகள் ஜனவரி 26ஐ கருப்பு தினம் என அனுசரிக்கும்படி அவர்கள் மக்களை கேட்டுக்கொண்டனர்.
பிரிவினைவாத குழுக்கள் சென்றவாரம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றில், ''கடந்த 71 ஆண்டுகளாக, ஜம்ம காஷ்மீர் மக்கள், சுய நிர்ணயம் பெறப் போராடி வருகின்றனர். காஷ்மீர் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஐநா மன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ மட்டுமல்ல, ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கிலும் மக்களிடம் உறுதியளித்தார்.
எனினும் இதுநாள் வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை. ஆனால் அதற்குப் பதிலாக காஷ்மீர் மக்களுக்கு தோட்டாக்கள் மற்றும் குண்டுகள் சிறையில் அடைக்கப்படுதல் போன்றவைதான் வெகுமதியாக அளிக்கப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.