முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கின் ரூ.16 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கின் ரூ.16 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
Updated on
1 min read

சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மற்றும் அவரின் குடும்பத்தாரின் ரூ.16.40 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மதபோதகரும், இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவனரான ஜாகீர் நாயக், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறினார். அவர் மீது பயங்கரவாதத்தை தூண்டியது, சட்டவிரோத பணப் பரிமாற்றம், கருப்புப் பண மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மும்பை நீதிமன்றத்தில் ஜாகீர் நாயக் உள்ளிட்டோருக்கு எதிராக தேசியப் புலனாய்வு அமைப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது மலேசியாவில் தங்கியுள்ள ஜாகீர் நாயக், வழக்கு விசாரணையைத் தவிர்க்கும் நோக்கில் இந்தியா வர மறுத்து வருகிறார்.

இந்நிலையில், ஜாகீர் நாயக்கிற்கு சொந்தமான ரூ.16 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

துபாயில் உள்ள பல்வேறு வங்கிக்கணக்கில் இருந்து ஜாகீர் நாயக்கின் வங்கிக்கணக்குக்கு ரூ.49 கோடி பணம் வந்துள்ளது. இந்த பணம் யார் அனுப்பியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

அதன்படி, மும்பையில் உள்ள ஃபாத்திமா ஹைட்ஸ், ஆஃபியா ஹைட்ஸ் ஆகிய கட்டடங்கள், மும்பை பாந்தப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடம், புணேவில் என்கிரேஸியா என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் கட்டடம் உள்ளிட்ட ரூ.16.40 கோடியாகும். இந்தச் சொத்துகள், ஜாகீர் நாயக்கின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி, ஜாகீர் நாயக்கின் வங்கிக் கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சொத்துக்களை முடக்க உத்தரவிட்டுள்ளோம்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாகீர் நாயக்கின் சொத்துகள் முடக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதுவரை ரூ.50.49 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஜாகீர் நாயக் மீதான வழக்கில், அவருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in