

தேசிய அளவில் லோக்பால் அமைப்பும், மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தையும் நிறைவேற்ற வலியுறுத்தி காந்தியவாதியும், ஊழலுக்கு எதிரானவருமான அண்ணா ஹசாரே இன்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்ற உத்தரவிட்டும் இன்னும் மகராஷ்டிரா மாநிலத்தில் நிறைவேற்றவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், லோக்பால் நீதிபதி யாரும் நியமிக்கப்படவில்லை.
இதைக் கண்டித்தும், லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்கக் கோரியும், மகராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்கக்கோரியும் காந்தியவாதி அண்ணா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
அகமது நகர் மாவட்டத்தில் உள்ள தனது, கிராமமான ரலேகான் சித்தியில் உள்ள பத்மாவதி கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்த அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த உண்ணா விரதத்தில் பங்கேற்று யாதவ்பாபா கோயில் முன் அமர்ந்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருந்துவரும் அண்ணா ஹசாரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகராஷ்டிரா முதல்வரையும் லோக் அயுக்தா விசாரிக்க முடியும் என்ற முடிவை மகராஷ்டிரா அரசு எடுத்துள்ளது வரவேற்கக்கூடியது. ஆனால், லோக்ஆயுக்தா சட்டம் இயற்றி, நீதிபதி நியமிக்கும் வரையிலும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணும்வரையிலும் என்னுடைய உண்ணாவிரதம் தொடரும் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு அண்ணா ஹசாரே திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் தன்னுடை உண்ணாவிரதப் போராட்டம் குறித்து விளக்கமாகத் தெரிவித்திருந்தார்.
அதில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 5 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு லோக்பால் அமைக்கவில்லை, 4 ஆண்டுகள் ஆகியும், லோக்ஆயுக்தா சட்டத்தை மகராஷ்டிரா அரசு இயற்றவில்லை.
லோக் ஆயுக்தா அமைப்பதாக எனக்கு தாங்கள் உறுதியளித்து 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அமைக்கவில்லை. ஆதலால், வரும் 30-ம் தேதிமுதல் என்னுடைய கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணா ஹசாரே, மகராஷ்டிரா அரசுக்கும் இடையே தூதராக செயல்பட்டுவரும் அமைச்சர் கிரிஷ் மகாஜன் மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், " அண்ணா ஹசாரே முதலில் சாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு 1.5 மடங்கு ஆதார விலை வழங்க வேண்டும் எனத்தெரிவித்தார்.
அதை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டோம். லோக்ஆயுக்தா சட்டத்தையும் விரைவில் நிறைவேற்றப்போகிறோம். இந்தச் சூழலில் அவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.அவரின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டுவிட்டன" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே அண்ணா ஹசாரேயின் உடல் நிலையைக் கவனிக்க மருத்துவர் குழு உள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவரின் உடல்நிலையைத் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.