2300 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருட்கள் ஒடிசாவில் கண்டுபிடிப்பு

2300 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருட்கள் ஒடிசாவில் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

ஒடிசாவில் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருட்களை இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபடித்துள்ளனர்.

இந்தத் தொல்பொருட்கள் அனைத்தும் மவுரியர்கள் காலம் முதல் குஷானர்கள் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஒடிசா மாநிலம், காலாஹண்டி மாவட்டத்தில் உள்ள அசுர்கார்க் கோட்டைப் பகுதியில் இந்த அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்திய தொல்லியல் அமைப்பின் மூத்த அகழ்வாராய்வாளர் திபிஷ்ஹடா பி கர்நாயக் தலைமையில் இந்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த அகழ்வாராய்வு குறித்து ஆய்வாளர் கர்நாயக் கூறுகையில், ''நாங்கள் இப்போது கண்டுபிடித்துள்ள தொல்பொருட்கள் அனைத்தும் 2300 ஆண்டுகளுக்கு முந்தையது. இவை மவுரியர்கள் காலம் முதல் குஷானர்கள் காலம் வரை இருக்கலாம் என்று நம்புகிறோம்.

சுட்ட செங்கற்கள், செங்கற்களால் ஆன கட்டிடம், வளைவுக் கட்டிடம், டெரகோட்டா சிற்பங்களை எடுத்து இருக்கிறோம்.

இந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் கருங்கற்களைக் கொண்டு வீடுகளையும், தரைக்கும், தெருக்களிலும் பதித்துள்ளனர். மேலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய வெள்ளி நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளோம்.

வெள்ளி, செம்பு உலோகங்களால் செய்யப்பட்ட மோதிரம், வளையல்கள், காதணிகள், நகைகள், கண்ணாடி வளையல் துண்டுகள் ஆகியவையும் கண்டுபிடித்துள்ளோம். கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் வயது 2300 ஆண்டுகளுக்கு முந்தையவை.

வெள்ளி நாணயங்களையும், அதில் உள்ள விதவிதமான உருவங்களையும் வைத்துப் பார்க்கும் போது, பல்வேறு நாடுகளில் இவர்கள் வணிகம் செய்திருக்கலாம், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருக்கலாம் என்று நம்புகிறோம்.

மேலும், இந்தக் கோட்டைக்கு நான்கு வாயில்களிலும் காவலாளிகள் வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாயிலுக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதிக்குக் கங்கா வாயில், மேற்குப் பகுதிக்கு கலாபத் வாயில், வடக்குப் பகுதிக்கு வைஷ்ணவி வாயில், தெற்குப் பகுதிக்கு டோக்ரி வாயில் எனப் பெயரிட்டுள்ளனர்'' என்று கர்நாயக் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in