

கறுப்புப் பணம், ஊழல் மீது மத்திய அரசு தொடுத்த போர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் புகழாரம் சூட்டினார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பெருமையாகப் பேசினார்.
நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.15.41 லட்சம் கோடி பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன்பின் ரூ.15.31 லட்சம் கோடி பணம் வங்கியில்டெபாசிட் செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கியும் அறிவித்து.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
''மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதிய சட்டங்கள், சிறப்பு புலனாய்வு குழுக்கள், வெளிநாடுகளுடன் வரித்தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைச் செய்து கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராகப் போர் புரிந்துள்ளது. கறுப்புப் பணத்தை தடுக்க பல்வேறு கடினமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராக அரசு பண மதிப்பிழப்பு மூலம் போர் புரிந்துள்ளது. நாட்டின் உண்மையான பொருளாதாரத்துக்கு இணையாகக் கறுப்புப் பணம் மூலம் நிழல் பொருளாதாரம் இருந்ததை வேருடன் அகற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பினாமி சொத்து தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளிக்கொணரப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டம், பொருளாதாரக் குற்றம் செய்து தப்பி ஓடியவர்களுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த அரசின் கொள்கையால், நடவடிக்கையால், ரியல் எஸ்டேட் துறையில் உள்ள கறுப்புப் பணம் குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்தது. வீடுகளின் விலை குறைந்து, சொந்த வீடுகள் வாங்க வேண்டும் என்ற நடுத்தர குடும்பத்தாரின் கனவு நனவானது.
இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்தியதால், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. இதனால், அரசுக்கு வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
கடந்த 2014-ம் ஆண்டு 3.8 கோடி மக்கள் வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த நிலையில், இப்போது 6.8 கோடியாக ரிட்டர்ன் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரிசெலுத்துவோர் தாங்கள் செலுத்தும் ஒவ்வொரு பைசாவும் தேசக் கட்டமைப்புக்கு பயன்படுகிறது என நம்புகின்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் வளர்ச்சியை மறைமுகமாக அழித்துவந்த, 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மீண்டும் பதவிக்கு வர தடை செய்யப்பட்டன.
2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசுக்கு முழு அளவிலான பெரும்பான்மையை மக்கள் அளித்து, கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராக ஸ்திரமான நடவடிக்கையை எடுக்கத் தீர்ப்பளித்தனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஊழலுக்கு எதிராக இந்த அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கறுப்புப் பணமும், ஊழலும் நாட்டில் நேர்மையாக வரி செலுத்துவோரின் உரிமைகளைப் பறித்து வந்தது. இந்த சூழலைக் கண்டறிந்து புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து திட்டங்களை அரசு வகுத்தது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி கொண்டுவரப்பட்டதன் மூலம், வர்த்தகம் மற்றும் வியாபாரத்தில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாட்டின் இளைஞர்களுக்கும் பயனளிக்கிறது. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்குப் பின் வர்த்தகர்கள் சந்தித்து வந்த பல்வேறு தொந்தரவுகள் குறைந்துள்ளன.
நாடு முழுவதும் எளிதாக தொழில்செய்யும் நிலை உயர்ந்துள்ளது. வர்த்தகர்கள், தொழில் பிரிவினரிடம் இருந்து அவ்வப்போது வரும் ஆலோசனைகள், கருத்துக்கள் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி முறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தபின், ஒரு நாடு, ஒருவரி, ஒரு சந்தை என்ற நிலை நனவாகியுள்ளது''.
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.