Published : 19 Jan 2019 11:01 AM
Last Updated : 19 Jan 2019 11:01 AM

ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுடன் மம்தா சந்திப்பு

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டுக்கு முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், முன்னாள் பிரதமர் தேவகவுடா, தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.

பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தமைக்காக அவர் நேரில் சந்தித்து வரவேற்று நன்றி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

 

இது தொடர்பாக இன்று காலை ட்விட்டரில் பதிவிட்ட மம்தா பானர்ஜி, "யுனைடட் இந்தியா பேரணி நடைபெறுவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இந்தப் பேரணியில் பங்கேற்க வருகை தந்துள்ள தேசியத் தலைவர்கள், ஆதரவாளர்கள், லட்சோப லட்ச மக்களை வரவேற்கிறேன். வலுவான, முன்னோக்கிச் செல்லும் ஐக்கிய இந்தியாவை உருவாக்குவோம்" என ட்வீட் செய்தார்.

ராகுல், சோனியா பங்கேற்கவில்லை...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை. ஆனால், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் பேரணியை ஆதரித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x