

அயோத்தியில் ராம்ஜென்மபூமி பாபர் மசூதி அமைந்துள்ள சர்ச்சைக்குரிய இடத்தைச்சுற்றி இருக்கும் 67 ஏக்கர் நிலத்தை உண்மையான உரியவர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்பட்டிருக்கும் சமிக்ஞை என்று இந்து அமைப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த 1991-ம் ஆண்டு, அயோத்தியில், சர்ச்சைக்குரிய ராம்ஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலப்பகுதியைச் சுற்றி 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வாங்கி இருந்தது. அந்த நிலப்பகுதியை உண்மையான உரிமையாளர்களான ராமஜென்ம பூமி நயாஸிடம் திருப்பி அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிதாக நேற்று மனுத்தாக்கல் செய்தது.
இது குறித்து பாஜக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை உண்மையான உரிமையாளர்களிடம் திரும்பி ஒப்படைக்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரி தாக்கல் செய்த முடிவு என்பது, ராமர் கோயில் விவகாரத்தில் தங்களால் முடிந்த குறைந்தபட்ச அளவு செய்ய முடிந்ததை காட்டுவதாகும். இந்த மனுவால் பிரதான வழக்கிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது " எனத் தெரிவித்தனர்.
பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், " அயோத்தி விவகாரத்தில் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கக்கூடியதாகும் " எனத் தெரிவித்துள்ளார்
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசின் இந்த முடிவு என்பது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அதற்குத் திடமான நோக்கம் இருக்கிறது என்பதையும், தங்களை சாந்தப்படுத்தும் முயற்சி என்றும் சங் பரிவார் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் முதல் விஸ்வ இந்து பரிசத் கவுன்சில் குழுவரை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடு ஆத்திரமூட்டும் வகையில் இருந்து வந்தது. ஆனால், இந்தச் செயல்பாடு அவர்களை அரசியல்ரீதியாக ஆற்றுப்படுத்தச் சிறிது இடைவெளி அளித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்றுமா என்று சமீபத்தில் டிவி நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த எதிர்மறையான பதில், விஎச்பி தொண்டர்களையும், சங்பரிவார் அமைப்பினரையும் அதிருப்தி அடையச் செய்திருந்தது.
மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 3 மாநிலங்களில் ஆட்சியை பாஜக பறிகொடுத்தது. இதனால், தொண்டர்கள் உற்சாகமிழந்திருந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், " அயோத்தியில் 67 ஏக்கர் நிலத்தை உண்மையான உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. சட்டப்படி எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, சட்டரீதியாகத் தீர்வு காண வேண்டும் என்ற அரசின் தீவிரமான நோக்கத்துக்கு எந்தவிதமான இடையூறும் செய்யாது, களங்கமும் ஏற்படாது. உண்மையான உரிமையாளர்களிடம் நிலத்தைத் திருப்ப ஒப்படைக்க எடுத்த முடிவு என்பது, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது" எனத் தெரிவித்தார்
மக்களவைத் தேர்தலுக்கு முன் திடீரென அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்புவது குறித்து பிரகாஷ் ஜவடேகரிடம் கேட்டபோது, " காங்கிரஸ் கட்சிக்கு கடவுள் ராமர் இருக்கிறார் என்பதன் மீதே நம்பிக்கை இல்லை.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 0.314 ஏக்கர் நிலம் மட்டுமே சர்ச்சைக்குரியது. அதுமட்டும்தான் முடிவு காணப்படாமல் இருக்கிறது. அந்த நிலத்தை அரசு ஒன்றும் செய்யவில்லை.67 ஏக்கர் நிலத்தில் 42 ஏக்கர் நிலம் ராம்ஜென்மபூமி நயாஸ்க்கு சொந்தமானது. உரிமையாளர்களிடம் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க எடுத்திருக்கும் அரசின் முடிவு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை விரும்புகிறது " என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விஸ்வ இந்து அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், " மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் மிக விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.