Published : 06 Sep 2014 01:17 PM
Last Updated : 06 Sep 2014 01:17 PM

கன மழையால் ஜம்மு - காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடக்கம்: ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளால் மீட்பு பணிகள் தோய்வடைந்துள்ளன.

மேலும் இந்த கடும் மழை இன்றும் தொடர்வதால் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து ஆறுகள் மற்றும் நதிகளின் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுவதனால் வீதிகள், பாலங்கள் நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை 120-ஆக அதிகரிப்பு:

மாநிலம் எங்கும் மழை மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. கனமழைக்கு மாநிலத்தில் உள்ள 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் பாதிக்கப்ப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களை மீட்கவும் நிவாரணம் அளிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சிந்து நதியிலும் அபாய எச்சரிக்கை:

சிந்து நதியில் நீரின் அளவு அபாய அளவை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிந்து நதியின் கிளைகள் பாயும் மத்திய காஷ்மீர் பகுதி மக்களை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதே போல ஜீலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கண்டர்பல், பட்காம், பந்திப்போரா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஸ்ரீநகர் வழியாக பாயும் ஜீலம் மற்றும் தூத் கங்கா ஆறுகளில் அபாயகட்டத்தை தாண்டியும் வெள்ளம் செல்வதால், ஸ்ரீநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஆற்று வெள்ளத்தில் 9 ராணுவ வீரர்கள் சிக்கினர்:

புல்வாமா மாவட்டத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 9 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 7 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் மாயமானதாக தகவல் வெளியானது.

பல இடங்களில் போக்குவரத்து தூண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் விமான நிலையம் மூடப்பட்டது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு:

இந்நிலையில் வெள்ள பாதிப்பை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக இன்று காலை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை சந்தித்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் புல்வாமா, அனந்த்நாக், குல்காம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணிகளையும் ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இவை அனைத்தையும் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் பார்வையிட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x