

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அவர் சிபிஐ இயக்குநராக தொடர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர். கடந்த 2016 டிசம்பரில் சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2017 -ம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்றபோது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.
நிதி மோசடி தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது சிபிஐ பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு களை நீர்த்துப் போக செய்ய ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.3 கோடியை மொயின் குரேஷி வழங்கி யதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராகேஷ் அஸ்தானா மற்றும் சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. தேவேந்திர குமார் நேற்று கைது செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக, அலோக் வர்மா லஞ்சம் வாங்கி யதாக கேபினட் செயலாளர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு ராகேஷ் அஸ்தானா புகார் கடிதங்களை அனுப்பினார்.
இரு அதிகாரிகளுக்கு இடையே கடும் மோதல் எழுந்ததால் இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.
இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என தீர்ப்பளித்தனர்.
மேலும், அவரே சிபிஐ இயக்குநராக தொடர்வார் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். அதேசமயம் அதிகார சர்ச்சை தொடர்பான புகார் நிலுவையில் இருப்பதால் அலோக் வர்மா முக்கிய முடிவுகள் எதையும் எடுக்ககூடாது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். அவர் மீதான புகாரை பிரதமர் மோடி தலைமையிலான விசாரணை குழு விசாரித்து முடிவெடுக்கும் வரை இந்த நிலை தொடர வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.