Last Updated : 25 Jan, 2019 08:55 AM

 

Published : 25 Jan 2019 08:55 AM
Last Updated : 25 Jan 2019 08:55 AM

2019-ம் ஆண்டில் முதல் வெற்றி: விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி44 ராக்கெட்; ராணுவ செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்

2019-ம் ஆண்டை வெற்றிகரமாகத் தொடங்கிய இஸ்ரோ, இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி44 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

விண்ணில் செலுத்தப்பட்ட 13 நிமிடங்களில் ராணுவ பயன்பாட்டுக்கு அனுப்பப்பட்ட மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோள், கலாம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நீள்வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் சிறிஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து 28 மணிநேர கவுண்ட்டவுன் முடிந்தவுடன் நேற்று இரவு 11.37 மணிக்கு பிஎஸ்எல்வி சி-44 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

44 மீட்டர் உயரம் கொண்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில், 740 கிலோ எடை கொண்ட ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட 13 நிமிடங்கள் 30 வினாடிகளில் புவிநீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டில் மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோளுடன் , மாணவர்கள் தயாரித்த சிறியரக கலாம் என்ற செயற்கைக்கோளும் ஏவப்பட்டு. கலாம் செயற்கைக்கோள் ரூ.12 லட்சத்தில் தயாரிக்கப்பட்டது. மாணவர்கள் நடத்தும் வானொலி நிகழ்ச்சிக்காகவும், பேரிடர் மேலாண்மை தொடர்பான விஷயங்களுக்காகவும் இந்தச் செயற்கைக்கோள் பயன்படும்.

நான்கு நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட் ராக்கெட்டிலிருந்து பிரிக்கப்பட்டுத் திட்டமிட்ட தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. ராக்கெட் ஒவ்வொரு நிலையையும் வெற்றிகரமாகத் தாண்டும்போதும், விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த பிஎஸ்எல்வி-சி44 ராக்கெட் 30 நாட்களில் வடிவமைக்கப்பட்டது. இதில் இரு முக்கிய பூஸ்டர்கள் இணைக்கப்பட்டு உள்ளன. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், சக விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் அவர் கூறுகையில், “ 2019-ம் ஆண்டின் முதல் முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதில் மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளும் இணைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதிக எடையைத் தாங்கிச் செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, செலவைக் குறைக்கும் வகையில் அலுமினியத்தால் ஆன எரிபொருள் டேங்க் பயன்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x