Published : 30 Sep 2014 08:30 AM
Last Updated : 30 Sep 2014 08:30 AM

அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றமில்லை: கோட்டையில் பணிகளைத் தொடங்கினார் முதல்வர்

புதிய முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், கோட்டையில் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் அவரவர் அறைகளில் பொறுப்பேற்றனர்.

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பகல் பதவியேற்றார். அதன்பிறகு பிற்பகல் 3.15 மணிக்கு கோட்டைக்கு வந்த அவர், 3-ம் எண் நுழைவாயில் வழியாக தனது பழைய அறைக்கு (நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் அறை) சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ‘நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்’ என்ற போர்டு அகற்றப்பட்டது. ‘ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர்’ என்று எழுதப்பட்ட புதிய போர்டை அதிகாரி ஒருவர் அறைக்குள் எடுத்துச் சென்றார். ஆனால், நேற்று மாலை வரை அந்த போர்டு மாட்டப்படவில்லை.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பை ஏற்றதும், அமைச்சர்கள் ஒவ்வொருவராக வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், அமைச்சர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், முதல்வரின் தனிச்செயலர்கள் ஷீலாபிரியா, வெங்கட்ரமணன், ராமலிங்கம், சுடலைக்கண்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, பொதுத்துறை முதன்மைச் செயலாளர் யதீந்திரநாத் ஸ்வைன், முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரி இன்னசன்ட் திவ்யா ஆகியோர் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித் தனர்.

மாலை 4.17 மணிக்கு அறையில் இருந்து வெளியே வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அடுத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் அறைக்குத் திரும்பினார். அப்போது செய்தி மக்கள் தொடர்புத் துறை செயலாளர் மூ.ராசாராம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் சாய்குமார், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் ஷோபனா ஆகியோர் வந்து முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதல்வரை வாழ்த்த வந்த யார் கையிலும் சால்வையோ, மலர்க்கொத்தோ இல்லை. எல்லோரும் வணக்கம் மட்டும் தெரிவித்தனர்.

போயஸ்கார்டனுக்கு..

முன்னதாக பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றதும் நேராக போயஸ்கார்டனுக்குச் சென்றனர்.

ஜெயலலிதா இல்லாதபோதும், அவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் போயஸ்கார்டன் வந்து சென்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரைத்த அமைச்சரவை இலாகா பட்டியலை அங்கீகரித்து, ஆளுநர் மாளிகை நேற்று மாலை வெளியிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த பொறுப்புகள் அனைத்தும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் ஏற்கெனவே வகித்த நிதி மற்றும் பொதுப்பணித் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் இல்லை. அவரவர் வகித்து வந்த பழைய இலாகாவே ஒதுக்கப்பட்டுள்ளது.

‘அம்மாவ கூட்டிட்டு வந்துடுங்கய்யா..’

கோட்டையில் இருந்து மாலை 4.40 மணிக்கு வெளியே வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காரில் ஏறுவதற்காக சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த அதிமுக தொண்டர் ஒருவர், “ஐயா.. எப்படியாவது அம்மாவ சீக்கிரம் கூட்டிட்டு வந்துடுங்கய்யா…’ என்று அழுதுகொண்டே கூறினார். இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர். கோட்டைக்கு வந்த முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் சோர்ந்த முகத்துடனே காணப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x