மீண்டும் ஆபரேஷன் தாமரை? - மும்பையில் பாஜக தலைவர்களுடன் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: கர்நாடக அரசியலில் பரபரப்பு

மீண்டும் ஆபரேஷன் தாமரை? - மும்பையில் பாஜக தலைவர்களுடன் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: கர்நாடக அரசியலில் பரபரப்பு
Updated on
1 min read

கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் மும்பையில் ஹோட்டல் ஒன்றில் பாஜக தலைவர்களுடன் தங்கி இருப்பதாக அம்மாநில அமைச்சர் சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது முதலாகவே அமைச்சரவை பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் இரு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர் களும் பதவி கேட்டு போர்க்கொடி தூக்குவதால் கர்நாடக அரசியல் களத்தில் அவ்வப்போது பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் அண்மையில் 8 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்னர். இதில், பதவி கிடைக்காத காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுமட்டுமின்றி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிஹோளி (காங்கிரஸ்) அதிருப்தி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அவர் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்தநிலையில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அவர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் தங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது முதலே ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் மும்பை ஹோட்டல் ஒன்றில் பாஜக தலைவர்களுடன் தங்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, என்ன விலை பேசப்பட்டது என்பது பற்றிய தகவல் இல்லை. 3 எம்எல்ஏக்களையும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் தற்போது உள்ளது’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in