வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்

வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
Updated on
1 min read

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அடுத்து மேலும் பல அதிரடியான கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு தயாராகி வருகிறது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகமாக இதனைத் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பேசும்போது, ‘‘கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் அதாவது ஆட்டம் முடியும் நேரத்தில் தான் சிக்ஸர் அடிக்கப்படுகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது? இது முதல் சிக்ஸர் அல்ல. அடுத்தடுத்து பல சிக்ஸர் வரவுள்ளது. இந்த சிக்ஸர்கள் வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான சிக்ஸர்களாக  இருக்கும். இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பேசப்பட்டு வருகிறது. இதில், வருமான வரி விலக்கு பெறும் சேமிப்பில் ரூ.2.5 முதல் 3 லட்சம் வரை அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதுபோல், புதிய வரிவிலக்குகளை இடைக்கால பட்ஜெட்டுகளில் அறிவிப்பது மரபு அல்ல. அதேசமயம் அறிவிக்கக் கூடாது என எந்த சட்டமும், விதிகளும் இல்லை.

எனவே, இதை மரபை உடைக்கும் வகையில் வரிவிலக்கு அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சரான ஜஸ்வந்த்சிங், ‘வருமான வரிச் சட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் அவசியமாகிறது.’ என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்திய நிதித்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, ‘2017-18 வருடத்திற்கான வருமான வரியில் சுமார் 6.84 கோடி பொதுமக்கள் சமர்ப்பித்திருந்தனர். இவர்களில் சுமார் பாதிபேர் ரூ.2.5 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்டவர்கள். இவர்களுக்கான அறிவிப்பாக வருமான வரியில் மாற்றம் இருக்கும்.’ எனத் தெரிவித்தனர்.

இதுபோல், மேலும் சில அதிரடி அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு அறிவிக்க உள்ளது. இவை அனைத்தும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் தனது ஆட்சி இருந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களை காங்கிரஸிடம் பாஜக பறிகொடுத்தது. இதன் பிறகு நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களின் தாக்கம் மக்களவை தேர்தலில் ஏற்படாதாவாறு பாஜக தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in