

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களின் வாக்குரிமையைப் பறித்து, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மச்சாரியாக வாழ்ந்து வரும் யோகா குரு பாபா ராம்தேவ், நாட்டில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருவது குறித்து அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களைத் தெரிவிப்பார். அதுபோல் இப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
உ.பி. மாநிலம், அலிகார் நகரில் பதஞ்சலி நிறுவனம் சார்பில் புதிய ஆடைகள் அறிமுக விழா நடந்தது. இதில் பாபா ராம்தேவ் பங்கேற்றார்.
அப்போது நடந்த நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசியதாவது:
''நாட்டில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கூட்டங்களில் நான் வலியுறுத்தி வருகிறேன். அதிகரித்து வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். நாட்டில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால், அவர்களிடம் இருந்து வாக்குரிமையைப் பறித்தால்தான் மக்கள் தொகைப் பெருக்கம் குறையும்.
அதுமட்டுமல்லாமல் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து வாக்குரிமை மட்டுமல்லாமல், அரசின் சலுகைகள் அனைத்தையும் பறிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் மக்கள் தொகைப் பெருக்கம் குறையும்.
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவர்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் படிக்க இடம் அளிக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதைத் தடை செய்ய வேண்டும். அரசு பணியும் வழங்கக் கூடாது. இவ்வாறு செய்தால்தான் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்''.
இவ்வாறு ராம்தேவ் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் ராம்தேவ் பேசுகையில், “ ''என்னைப் போல் திருமணம் செய்யாமல் வாழ்பவர்களுக்கு வெகுமதியும், சிறப்பு மரியாதை செய்ய வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்ர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்'' எனப் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.