கடற்கரையில் மது குடிக்க, சமையல் செய்ய கோவா அரசு தடை: மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

கடற்கரையில் மது குடிக்க, சமையல் செய்ய கோவா அரசு தடை: மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
Updated on
1 min read

கடற்கரையில் மது அருந்தவும், சமையல் செய்யவும் தடை விதித்துள்ள கோவா அரசு, மீறினால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

கோவாவில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக மனோகர் பாரிக்கர் இருந்து வருகிறார். மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் அஜ்கான்கர் நேற்று நிருபர்களுக்கு பானாஜியில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கோவாவில் உள்ள கடற்கரையிலும் மக்கள் கூடுமிடங்களிலும், சிலர் மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து விடுகிறார்கள். சிலர் சமையல் செய்து அசுத்தம் செய்கிறார்கள். இதைத் தடுக்கும்வகையில், சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளோம். அதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 29-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்தத் திருத்தத்துக்கு ஒப்புதல் பெறப்படும். இதன்படி, கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரைகளில் யாரேனும் மது அருந்தினாலோ அல்லது சமையல் செய்தாலோ அல்லது பாட்டில்களை உடைத்தாலோ அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இனிமேல் யாரும் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மது பாட்டில்களை உடைக்கவோ, மது குடிக்கவோ கூடாது. மதுபாட்டில்களையும் எடுத்து வரக்கூடாது. உணவுகளையும் திறந்தவெளியில் சமைக்கக் கூடாது. இந்தத் தடையை மீறுவோருக்கு அபராதமும், அபராதத்தைச் செலுத்த தவறினால் 3 மாதம் சிறையும் விதிக்கப்படும். கூட்டமாக இந்த தவறைச் செய்தால், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன், குற்றம் செய்வோரின் புகைப்படம் அனுப்பப்பட்டு, அவர் மீது 12 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்''.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

போர்ச்சுகீசியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மாநிலமான கோவாவுக்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.

ஆனால், சமீபகாலமாக கடற்கரைப் பகுதிகளில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள், பாதுகாப்பின்மை, திருட்டு, வழிப்பறி போன்றவற்றால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையத் தொடங்கியது. இதற்கு அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுற்றுலா நிறுவனங்கள் நடத்தும் நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in