

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக நீண்டநேரம் பேசியுள்ளார், ஆனால் என்னுடைய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்தநிலையில் மக்களவையில் இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விமானத்தை வாங்க விருப்பவில்லை. பணம் கிடைக்காது என தெரிந்ததால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளி இந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு பாஜக அரசு முன்னுரிமை அளிக்கிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் தயாராகும்.
போபர்ஸ் தான் ஊழல், அந்த ஊழலால் அப்போது ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை இழந்தார். ஆனால், ரஃபேல் நாட்டின் பாதுகாப்புக்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், ரஃபேல் ஒப்பந்தம் பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை. அவர் அனில் அம்பானியின் பெயரைகூட உச்சரிக்கவில்லை. விவாதத்தின்போது நான் இரண்டு கேள்விகளை எழுப்பினேன்.
விமான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் யார்? பிரதமர் மோடி தாமாகவே ஒப்பந்தம் செய்தபோது விமானப்படை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தார்களா என கேட்டேன். இதற்கு அவர் பதிலளிக்கவில்லை. மாறாக பெரும் நாடகத்தை அவையில் நடத்தியுள்ளார். அவர் இரண்டு மணிநேரம் பேசியுள்ளார், ஆனால் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.