

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறைகேடு செய்ய முடியும் என செயல்விளக்கம் அளித்த அமெரிக்க ஹேக்கர் சையது சுஜா மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லண்டனில் கடந்த திங்கள்கிழமை இந்திய பத்திரிகையாளர்கள் நடத்திய நிகழ்ச்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த சையது சுஜா என்பவர் ஸ்கைப் மூலம் பேசினார். அப்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள இவிஎம்-களில் முறைகேடு செய்ய முடியும் என செயல்விளக்கம் அளித்தார். மேலும் 2014 மக்களவைத் தேர்தலில் இவிஎம் மோசடி செய்தே பாஜக ஆட்சிக்கு வந்தது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சையது சுஜாவின் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மேலும் இவிஎம் குறித்து பொய்யான தகவலைக் கூறி மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்திய சையது சுஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி காவல்துறையிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தது.
இதையடுத்து டெல்லி நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் சையது சுஜா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 505-வது பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “505-வது பிரிவின் கீழ் விசாரணையை தொடங்க நீதிமன்ற அனுமதி பெறுவது அவசியம். இந்த வழக்கை சைபர் நிபுணத்துவம் பெற்ற அமைப்பு விசாரிக்க வேண்டியுள்ளது. மேலும் மின்னணு தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது” என்றார்.