

மம்தா பிராந்தியத் தலைவர் இல்லை, தேசியத் தலைவர் என புகழாரம் சூட்டியிருக்கிறார் சத்ருகன் சின்ஹா.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘பிரிகேட் பரேட்’ மைதானத்தில் நாளை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் சரத்பவார், தேவகவுடா, சந்திரபாபு நாயுடு, மாயாவதி, அகிலேஷ் சிங் யாதவ், பரூக் அப்துல்லா, அர்விந்த் கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுடன் அருணாச்சலப் பிரதேசத்தில் 5 முறை முதல்வராக இருந்த ஜிகாங் அபாங், முன்னாள் பாஜக அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோரும் மேடையேறுகின்றனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னால் மம்தா பிரதமர் ஆவார் என்று நினைக்கிறீர்களா? என சத்ருகன் சின்ஹாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சத்ருகன் சின்ஹா, "பிதமர் யார் என்பதை மக்களும், தேர்தலுக்குப் பின்னர் வாக்கு பலத்தைப் பொறுத்து கட்சியினரும் தேர்வு செய்வர். ஆனால் மம்தா நிச்சயமாக தலைமைக்கான சிறப்பு அந்தஸ்து கொண்ட இடத்தில் இருக்கிறார்.
அவர் இனியும் பிராந்தியத் தலைவர் அல்ல முன்னணி தேசியத் தலைவர்" என்றார்.
சத்ருகன் சின்ஹா வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் பாட்னா சாஹிப் தொகுதியில் நின்று வென்றார்.
ஆனால், அவருக்குப் பதவி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் மோடி அரசை அவர் பல விதங்களில் விமர்சித்தார். கடைசியாக ரஃபேல் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை சத்ருகன் சின்ஹா ஆதரித்தார்.