

பாரத ரத்னா விருது அறிவித்த மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது அசாம் போலீஸில் புகார் செய்யப்பட்டது.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகர் மறைந்த நானாஜி தேஷ்முக் மற்றும் மறைந்த இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு கடந்த 25-ம் தேதி பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே 26-ம் தேதி கூறும்போது, “குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், ஆர்எஸ்எஸ் பிரமுகர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர் பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. அதேநேரம் அனாதை குழந்தைகளுக்காக தனது வாழ்வை தியாகம் செய்த சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சுவாமியின் பெயரை பாரத ரத்னா விருதுக்கு பரிசீலனை செய்யாமல் மத்திய அரசு அவரை புறக்கணித்துள்ளது” என கூறியிருந்தார்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சஹாய் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் மோரிகான் காவல் நிலையத்தில் மல்லிகார்ஜுன கார்கே மீது நேற்று புகார் செய்தார். மேலும் அசாம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுபோல பாரத ரத்னா விருதை அவமதித்ததாக, அசாமிய பாடகர் ஜுபீன் கர்க் மீது நேற்று முன்தினம் 2 பேர் போலீஸில் புகார் செய்தனர். பாஜகவின் விவசாயிகள் பிரிவு மாநில துணைத்தலைவர் சத்ய ரஞ்சன் போரா, ஹோஜாய் மாவட்டத்தின் லங்கா காவல் நிலையத்திலும் விஸ்வஜித் நாத் திஸ்பூர் காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகாருடன் கர்க் பேசிய ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதலங்களில் பரவி வருகிறது. இதனிடையே கர்க் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக லங்கா காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.