Published : 18 Jan 2019 04:51 PM
Last Updated : 18 Jan 2019 04:51 PM

மீசை வைத்த போலீஸுக்கு நல்ல செய்தி: உ.பி.யில் காவலர்களுக்கு மீசை பராமரிப்புப் பணம் 400% அதிகரிப்பு

பெரிய மீசை வைத்திருக்கும் ஆயுதம் தாங்கிய மாவட்ட கான்ஸ்டபிள்களுக்கு (PAC) மீசை பராமரிப்புப் பணம் 400% அதிகரித்து வழங்கப்பட உள்ளது.

மாநிலத்தில் உள்ள 22 பிஏசி பட்டாலியன்களுக்கும் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படுகிறது. வலிமையான மீசைகளை வைத்திருந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிஏசியின் தலைவராக,  கூடுதல் டிஜிபி பினோத் குமார் சிங் ஜனவரி 11-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற சில நாட்களிலேயே மீசை பராமரிப்புப் படியை அதிகரித்து பினோத் உத்தரவிட்டுள்ளார்

இதுதொடர்பாகப் பேசிய அவர், ''முன்னதாக பிஏசி காவலர்கள், தங்களின் மீசையைப் பராமரிக்க மாதம் தோறும் ரூ.50 வழங்கப்பட்டது. ஆனால் இப்போது வலுவான மற்றும் கனமான மீசை வைத்திருப்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ரூ.250 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பராமரிப்புத் தொகை 400% உயர்த்தப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் கும்பமேளாவில் கனமான மீசைகளைத் தாங்கிய பிஏசி காவலர்கள் சிலரைப் பார்க்கும்போதுதான் இந்த யோசனை வந்தது.

ஆணின் ஆளுமையை அதிகரிப்பதில் மீசை முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. போலீஸ்காரர்களுக்கு இதுகூடுதலாகவே ஏற்படுகிறது.

அதே நேரத்தில் யாரையும் மீசை வைக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பம். அத்துடன் காவலர்களின் ஃபிட்னஸை அதிகரிக்கச் செய்ய சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளேன்'' என்றார் பினோத்.

பினோத்தின் முன்னெடுப்பு குறித்து ஓய்வுபெற்ற டிஎஸ்பி ஹர்பால் சிங்கிடம் கேட்டபோது, ''1995 வரை பெரும்பாலான போலீஸார் பெரிய மீசைகளை வைத்திருந்தனர். ஆனால் இளைய சமுதாயம் முழுமையாகச் சவரம் செய்வதையே விரும்புகிறது. பழமையை மீட்டெடுப்பது மகிழ்ச்சியைத் தருகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x