Last Updated : 08 Jan, 2019 12:44 PM

 

Published : 08 Jan 2019 12:44 PM
Last Updated : 08 Jan 2019 12:44 PM

அரசியலில் ஒழுங்கில்லை; கல்வி கற்கத் திரும்பிவிட்டேன்: 81 வயது அரசியல்வாதியின் அனுபவப் பகிர்வு

அரசியலில் ஒழுங்கில்லை. அதனால் கல்வி கற்கத் திரும்பிவிட்டேன் எனக் கூறியுள்ளார் ஒடிசா மாநில முன்னாள் எம்.பி.,  நாராயண் சாஹூ.

சாஹூ, ஒடிசா மாநில சட்டப்பேரவையில் இரண்டு முறை எம்.எல்.ஏ., வாக இருந்தவர். ஒருமுறை மக்களவை எம்.பி.யாகவும் இருந்தார்.ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார்.

இப்போது அவர் தனது 81 வயதில் முனைவர் பட்டம் பெறும் முனைப்புடன் விடுதியில் தங்கி ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருக்கிறார்.

அரசியலில் இருந்து ஒதுங்க அவர் கூறிய காரணம், "மிகுந்த ஆசையுடன்தான் நான் அரசியலுக்கு வந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் அரசியலில் தவறு மிகுந்தது. அது எனக்கு விரக்தியளித்தது. அதனால் அரசியலைத் துறக்க முடிவு செய்தேன்.

என்னை நானே திருத்திக் கொள்ள வேண்டுமானால் மீண்டும் மாணவனாக மாற வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தக் கால அரசியலில் எந்த விதிமுறையும் இல்லை, எந்த ஒழுங்கும் இல்லை. எந்தக் கொள்கையும் இல்லை. இதனாலேயே அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டேன்.

உட்கல் பல்கலைக்கழகத்தில் எனக்கு இடம் கிடைத்த நாள் எனது வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாள்" என்றார்.

46 ஆண்டுகளுக்குப் பின்..

1963-ல் சாஹூ பொருளாதாரப் படிப்பில் பட்டம் பெற்றார். 46 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ல் மீண்டும் கல்விப் பயணத்தைத் தொடங்கினார். 2009-ல் உட்கல் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றார். 2012-ல் எம்.ஃபில் முடித்தார். தற்போது முனைவர் பட்டத்தை நோக்கி படித்துக் கொண்டிருக்கிறார்.

சாஹூவைப் பற்றி அவர் தங்கியுள்ள விடுதியில் பேசினால், வயது பேதம் பார்க்காமல் எங்களுடன் நண்பரைப் போல் பழகுகிறார். சில நேரங்களில் அவர் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்றனர்.

பழுத்த அரசியல்வாதி ஒருவர் தற்கால அரசியல் ஒழுங்கில்லை எனக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x