

கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடகு, தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, ஷிமோகா உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த வியாழக்கிழமை குடகு மாவட்டத்தில் 12.5 செ.மீ.மழை பதிவானது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கன மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதே போல கேரள மாநிலம் வயநாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கபினி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு ஒவ்வொரு 5 மணி நேரத்துக்கும் அதிகரித்து வருகிறது.
அணைகளின் நீர்மட்டம்
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 17,875 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 123.5 அடியாக இருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 17,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் அணையின் நீர் இருப்பு வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 2283.75 அடியாக இருந்தது. வினாடிக்கு 15,000 கன அடி நீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 14,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஷிமோகா மாவட்டத்தில், மலைநாடு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் இருந்து தலா 1000 கன அடி உபரி நீராக தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்கம் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே கிருஷ்ணராஜசாகர்,கபினி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்ற, அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.