Published : 09 Jan 2019 07:43 AM
Last Updated : 09 Jan 2019 07:43 AM

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மக்களவையில் மசோதா நிறைவேற்றம்: மாநிலங்களவையில் இன்று தாக்கல்

அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொது பிரிவினர்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019 மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

உயர் சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இப்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. எனவே, உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதன்படி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019-ஐ மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அதாவது அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளின்படி சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. எனவே, இதில் திருத்தம் செய்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

விவாதத்தில், காங்கிரஸ் உறுப்பினர் கே.வி.தாமஸ் பேசும்போது, “இந்த மசோதாவை ஆதரிக்கிறோம். ஆனால் இதை தாக்கல் செய்துள்ள நேரம்தான் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

ஜேட்லி விளக்கம்மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “சாதி அடிப்படையில் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்குவதற்குதான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொது பிரிவினரில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. எனவே, அனைவரும் இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் பேசும்போது, “தனியார் துறை மற்றும் நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும்” என்றார். அவசரம் ஏன்?ஆனந்த்ராவ் அட்சுல் (சிவசேனா), ஜிதேந்திர ரெட்டி (டிஆர்எஸ்), பார்த்ருஹரி மஹதாப் (பிஜேடி), ஜிதேந்திர சவுத்ரி (சிபிஐ-எம்), சுப்ரியா சுலே (என்சிபி), தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாதி) உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளில் அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினர். அதிமுக எதிர்ப்புஅதிமுக எம்பி தம்பிதுரை பேசும்போது, “இந்த மசோதாவை எதிர்க்கிறோம். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது. ஏழைகளின் நலனுக்காக போதுமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன” என்றார். சுதிப் பந்தோபாத்யாய் (டிஎம்சி) பேசும்போது, “இந்த மசோதாவால் வேலை வாய்ப்பின்மை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? இதுபோல பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தாதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

மாயாவதி ஆதரவுபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், “உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறோம். ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் சுயலாபம் கருதி கடைசி நேரத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சிக்கிறது” என்றார்.

சமாஜ்வாதி வரவேற்புஅகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் இந்த மசோதாவை வரவேற்றுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் கூறும்போது, “லட்சுமண ரேகையை (உச்ச நீதிமன்றத்தின் 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு) அரசு தாண்டினால்), ஓபிசி பிரிவினருக்கு 54 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றார். உறுப்பினர்களின் விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக அதிமுக எம்.பி. தம்பிதுரை வெளிநடப்பு செய்தார். அதிமுகவை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் யாரும் நேற்று அவை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

இதன் பின் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாக்கெடுப்பை நடத்தினார். 323 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 3 எம்.பி.க்கள் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர்.

இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இது சட்டமானால், பிராமணர், ரஜபுத்திரர் (தாகுர்), ஜாட், மராத்தா, பூமிஹர், வர்த்தக சாதியினர் உள்ளிட்டோர் பயனடைவர். இந்த மசோதாவின்படி, ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெற முடியும். சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வாக்காளர்களைக் கவர இந்த இட ஒதுக்கீடு மசோதா அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x