

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி வீட்டில் ஊழல் தடுப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள், கோடிக்கணக்கான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெய்ப்பூரை அடுத்த ஜகத்பூரில் இந்திய வருவாய்த்துறை அதிகாரி சாஹி ராம் மீனாவின் சங்கர் விஹார் பங்களாவில் காவல்துறையினரின் உதவியுடன் நேற்று (சனிக்கிழமை) ஊழல்தடுப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரி சாஹி ராம் மீனா வீட்டில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் அவருக்கு சொந்தமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏராளமான சொத்துக்களுக்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் அவரது வீட்டில் இருந்த பணம், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிரடி சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், பணம், நகைகள் விவரம்: பணமாக ரூ.2,26,00,098, நகையின் மதிப்பு ரூ.6 லட்சம், ஒரு குடியிருப்பு, ஒரு பெட்ரோல் பங்க், 25 கடைகள் மற்றும் 82 துண்டு நிலங்கள், ஜெய்ப்பூர் நகரில் ஒரு நட்சத்திர விடுதி ஆகியவையாகும்.
ஐஆர்எஸ் அதிகாரி சாஹி ராம் மீனா சமீபத்தில்தான் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தின் போதைத் தடுப்புப் பிரிவின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அதிரடி சோதனையில் கணக்கிலடங்கா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.