

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கடந்த இரு வாரங்களுக்குப் பின் வீடு திரும்பிய நிலையில் மாமியார் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
போலீஸார் பாதுகாப்பில் இரு வாரங்களாக இருந்த நிலையில், வீட்டுக்கு இன்று சென்றவுடன் அந்தப் பெண் மீது மாமியார் தாக்குதல் நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
சபரிமலையில் அனைத்துப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி, கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி பிந்து, கனகதுர்கா ஆகிய இருபெண்கள் சபரிமலைக்குச் சென்றபோது பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பினார்கள். இந்த இரு பெண்களும் கடந்த 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இவர்கள் இருவரும் கோயிலுக்குச் சென்று திரும்பியுடன் கோயில் தந்திரி கோயில் நடையைச் சாத்தினார். அதன்பின் பரிகாரப் பூஜைகள் செய்த பின் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா, சிவில் சப்ளை துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்து அமைப்புகள் எதிர்ப்பு, வலது சாரி அமைப்புகளின் போராட்டம் ஆகியவற்றால், கடந்த இரு வாரங்களாக போலீஸார் பாதுகாப்பில் மறைவிடத்தில் கனகதுர்கா தங்கி இருந்தார். ஆனால், கனகதுர்காவுக்கு மாநிலத்தில் இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று காலை கனகதுர்கா தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த கனகதுர்காவின் மாமியாருக்கும், கனகதுர்காவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றது குறித்து கனகதுர்காவைக் கண்டித்த அவரின் மாமியார் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் கனகதுர்காவுக்கு காயம் ஏற்பட்டு பெரிதலமன்னா தாலுக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின் அங்கிருந்து கிசிச்சைக்காக மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கனகதுர்கா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கனகதுர்காவின் மாமியாருக்கும் லேசான காயம் ஏற்பட்டதால், அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.