Last Updated : 15 Jan, 2019 03:19 PM

 

Published : 15 Jan 2019 03:19 PM
Last Updated : 15 Jan 2019 03:19 PM

கடந்த காலத்தில் பாரம்பரியத்தை மறந்து சுல்தான்கள் போல் ஆட்சி செய்தார்கள்: பிரதமர் மோடி ஆவேசப் பேச்சு

கடந்த காலத்தில் நாட்டை ஆண்டவர்கள், சுல்தான்கள் போல் ஆட்சி செய்துள்ளார்கள். நாட்டின் உயர்ந்த பாரம்பரியத்தை உதறித் தள்ளி, புனிதமான நாகரிகத்தைப் புறக்கணித்துள்ளனர். அதைக் காக்கத் தவறிவிட்டனர் என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.

ஒடிசா மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு ரூ. 1550 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பாரபள்ளி-துங்குரிபள்ளி, மற்றும் பாலங்கிர்-தியோகான் ரயில்வே மற்றும் சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், 6 பாஸ்போர்ட் சேவை மையத்தையும் பிரமதர் மோடி தொடங்கிவைத்தார். வரலாற்றுச் சின்னங்கள், பொருட்களைப் பாதுகாக்கும் மையத்தை அமைப்பதற்கான அடிக்கல் பிரதமர் மோடி நாட்டினார்.

அதன்பின் பாலங்கிர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த காலத்தில் நாட்டை ஆண்டவர்கள் சுல்தான்போல் ஆட்சி செய்துள்ளனர். நம்முடைய உயர்ந்த பாரம்பரியம், புனிதமான நாகரிகம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, பாதுகாக்கத் தவறிவிட்டனர். நாட்டை ஆள்வதற்கு அவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தும் அவர்கள் எந்த சூழலிலும் பாடம் கற்கவில்லை.

ஆனால், எங்கள் தலைமையிலான அரசு நாட்டின் பாரம்பரியத்தை காக்கக் கடமைப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க அரசு முயன்று, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாங்கள் சர்வதேச யோகா தினம் கொண்டாடினால்கூட எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள். இவ்வாறு எதிர்ப்பவர்கள் யோகாவை ஊக்குவிக்கவில்லை. நாட்டின் சுற்றுலாவையும், நாட்டையும் புரிந்து கொள்ளவில்லை.

ஒற்றுமையின் சின்னமாக சர்தார் படேல் சிலை அமைத்ததையும் எதிர்க்கிறார்கள். உலகின் உயரமான சிலையான இதை அமைக்கும் போது ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகின என்பதை மறந்துவிட்டார்கள். அந்தமான் நிகோபர் தீவுகளுக்குத் தலைவர்கள் பெயரைச் சூட்டியதைக்கூட எதிர்க்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், ஏறத்தால 6 கோடி போலி ரேஷன் கார்டுகள், கேஸ் இணைப்புகள், போலியான பெயரில் உதவித்தொகை பெறுதல், ஓய்வூதியம் பெறுதல் போன்றவற்றை ஒழித்திருக்கிறோம், கோடிக்கணக்கான பணத்தை அரசுக்குச் சேமித்து இருக்கிறோம். அனைத்து ரேஷன் கார்டுகளும் டிஜிட்டல் முறையாக்கப்பட்டு, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஏழை மக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் பணத்தைக் கொள்ளையடித்ததை நாங்கள் தடுத்து நிறுத்திவிட்டோம். ஒவ்வொருவருக்கும் தேவையானது கிடைக்க வழி செய்திருக்கிறோம்.

சுதந்திரத்துக்குப் பின் முதல்முறையாக, பாஜக அரசு எடுத்த புதிய முயற்சியால், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து உயர் சாதி ஏழைகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்திருக்கிறோம். அதேசமயம், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் குறைக்கவில்லை.

5 வகையான கோட்பாடுகளுடன் நாங்கள் ஆட்சி செய்கிறோம். குழந்தைகளுக்கான கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, முதியோர்களுக்கு மருத்துவ வசதி, விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி, மக்களின் பிரச்சினைகளை அறிதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பணி செய்கிறோம்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x