

சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் மீது கோல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார்.
பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த புகாரில் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சாரதா சிட்பண்ட் நிறுவனமும், ஜி.என்.என்.பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனமும் இணைந்து பாசிட்டிவ் என்ற ஒரு டிவி சேனலை வாங்குவது தொடர்பாக கடந்த 2010-ல் ஒப்பந்தம் செய்தன.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில், ஜி.என்.என். நிறுவனம் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் ஆஜரானார். இதற்காக அவருக்கு வழக்கறிஞர் கட்டணமாக ரூ.1 கோடியை சாரதா சிட்பண்ட் நிறுவனம் வழங்கியது.
இந்த வழக்கில் ஆஜரான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்துக்கு ரூ.1 கோடி கட்டணமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ஏற்கெனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன. இந்நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கோல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.