சட்டத்தைக் காட்டிலும் ராமர் பெரிதாக மோடிக்கு தெரியவில்லை: சிவசேனா தாக்கு

சட்டத்தைக் காட்டிலும் ராமர் பெரிதாக மோடிக்கு தெரியவில்லை: சிவசேனா தாக்கு
Updated on
1 min read

சட்டத்தைக் காட்டிலும் மோடிக்கு ராமர் கோயில் பெரிதாகத் தெரியவில்லை என்று சிவசேனாக் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

பிரதமர் மோடி நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார். அப்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சிவசேனா கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “ உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோயில் தொடர்பான வழக்கு வரும் 4-ம் தேதி வர இருக்கிறது. ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபின்புதான் ராமர் கோயில் கட்டுவது குறித்த அரசின் நடவடிக்கை இருக்கும்” எனத் தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாக் கட்சி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நடப்பு குளிர்காலக்கூட்டத்தொடரிலேயே அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அயோத்தி விவகாரம் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவசரச்சட்டம் ஒன்றே ராமர் கோயில் கட்டுவதற்குத் தீர்வு என்று தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேட்டியில் ராமர் கோயில் குறித்து அவரின் கருத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவசேனாக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத், ட்விட்டரில் கூறுகையில், “ ராமர் கோயில் வழக்கு என்பது அவரசமானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. பிரதமர் மோடி சொன்தற்கும், உச்ச நீதிமன்றம் சொன்னதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நினைக்கிறோம். ராமர் கோயில் விவகாரத்தில் மோடியின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக அவர் கூறியதற்கு நான் அவரைப் பாராட்டுகிறேன்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டுவரமாட்டோம் என்று பிரமதர் மோடி கூறிவிட்டார். இதன் உள்அர்த்தம் என்னவென்றால், சட்டத்தைக் காட்டிலும் மோடிக்குக் கடவுள் ராமர் பெரிதாகத் தெரியவில்லை என்பதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில் “ பாஜகவுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். மக்கள் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்ற மோடியின் பொய்யான வாக்குறுதி, நல்லகாலம் பிறக்கும் என்ற மோடியின் வெற்றுவார்த்தை ஜாலம் ஆகியவற்றை நாங்கள் மன்னித்துவிட முடியும்.

ஆனால், கடவுள் பெயரால், எங்கள் நம்பிக்கையின் மீது பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றினால் உங்களை மன்னிக்கமாட்டோம். உங்களை நாங்கள் தோற்கடிப்போம். ராமர் கோயில் மட்டுமல்ல எந்த கடவுளின் பெயரிலும் பொய்யான வாக்குறுதி அளிக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம் “ எனச் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in