

எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் இந்தி திரைப்படப் பாடலை பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பாடிய வீரர் சுரீந்தர் சிங் என அடையாளம் தெரியவந்துள்ளது. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியன் ஐடல் என்ற பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் 1997-ல் வெளியான 'பார்டர்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற சந்தேசே ஆத்தே ஹை.. என்ற பாடலை எந்த இசைக்கருவியுமே இல்லாமல் அழகாக ஸ்ருதி சுத்தமாகப் பாடிய வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.
இந்தப் பாடல் எல்லையில் தேசம் காக்கும் பணியில் இருக்கும் வீரர்கள் தங்கள் நெருங்கிய சொந்த பந்தங்களை நினைத்து ஏங்கும் உணர்வுகளை மிக அழகாகப் பதிவு செய்திருக்கும். உறவுகளிடமிருந்து கடிதம் தாங்கிவரும் உணர்வுகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் இந்தப் பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
திரைப்படப் பாடல் என்றாலும்கூட சுரீந்தர் சிங் பாடும்போது அந்த ஏக்கம் சற்றும் குறையாமல் ஒலித்தது. சுற்றி நின்று கைதட்டி உற்சாகப்படுத்திய வீரர்களும் இதே ஏக்கத்தைப் பதிவு செய்திருப்பர்.
இந்தப் பாடல் முதலில் யூடியூபில்தான் வைரலானது. அதனை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட அது தற்போது ட்விட்டரிலும் வைரலாகப் பரவி வருகிறது.