Published : 19 Jan 2019 01:42 PM
Last Updated : 19 Jan 2019 01:42 PM

பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி: கொல்கத்தா மாநாட்டில் தலைவர்கள் முழக்கம்

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெறும் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரபிரதேசத்தில் சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங் கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

தெலங்கானாவின் ஆளும் கட்சி யான தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஆந்திராவின் முக்கிய எதிர்க்கட்சி யான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பாஜக, காங்கிரஸ் இல்லாத கூட்டணியை ஆதரிக்கின்றன.

தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்க வில்லை. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்ட் தலைவர்கள் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்.

மம்தா நடத்தும் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்காத போதும் ஆதரவு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த மாநாடு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதம்ர தேவேகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மந்திரிகள்  யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பாஜக அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஹர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

யஷ்வந்த் சின்ஹா பேசுகையில் ‘‘அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கு (பிரதமர் மோடி) எதிராக  மட்டுமே மோதிக்கொண்டு இருப்பதாக கூறுகிறார். இது அதிகாரத்தில் இருந்து ஒருவரை இறக்குவது பற்றிய விஷயம் அல்ல. ஒரு சித்தாந்தத்துக்கு எதிரான போராட்டம்’’ என்றார்.

ஜிக்னேஷ் மேவானி பேசுகையில் ‘‘முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு நெருக்கடியை சந்தித்து வருகிறது.  அனைத்து கட்சிகளும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்துவது அவசியமான ஒன்று’’ என்றார்.

அருண் ஷோரி பேசுகையில் ‘‘வேறு எந்த அரசும் இதுபோன்று மக்களுக்கு பொய் கூறியதில்லை, கர்நாடகத்தில் நடப்பது போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் நடக்கும். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பாஜக வேட்பாளருக்கு எதிராக ஒரே ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் மட்டுமே இருக்க வேண்டும்’’ என்றார். தொடர்ந்து மற்ற தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x