

மேற்குவங்க மாநிலத்தில் நேற்று அமித் ஷா கலந்து கொண்ட கூட்டத்தில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பணியாற்றி வருகிறது. இதனால் பாஜகவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்து வருகிறார். இதனால் இருகட்சிகள் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது.
இந்தநிலையில் கோல்கத்தா அருகே கன்ந்தி என்ற இடத்தில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாஜக தொண்டர்கள் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது இந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடந்தது. வாகனங்களின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பேருந்தில் ஆயுதங்களுடன் வந்த பாஜகவினர் தங்கள் வாகனங்களை அவர்களே தாக்கிக் கொண்டதாக திரிணமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
இதனிடையே, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி ராஜ்நாத் சிங் முதலில் தனது கட்சியினரை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் வன்முறையை தூண்டுவது பாஜகவினர் தான் எனக் கூறியுள்ளார்.