Published : 08 Jan 2019 12:01 PM
Last Updated : 08 Jan 2019 12:01 PM

‘பாரத் பந்த்’ - தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்: மேற்குவங்கத்தில் போக்குவரத்து முடங்கியது

மத்திய அரசை கண்டித்து நாடுமுழுவதும் தொழிற்சங்கத்தினர் இன்றும் நாளையும் பொது வேலை நிறுத்தம் நடத்தி வருகின்றனர். இதனால் கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கத்தினர் இன்று முதல் இரண்டு நாட்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை, பணி நிரந்தரம், குறைந்தபட்ச சம்பள விகித உயர்வு, தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூட்டாக இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன.

அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட வாகன தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தனர்.

இதன்படி நாடுமுழுவதும் தொழிற்சங்கத்தினரின் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை தொடங்கியது. இடதுசாரி தொழிற்சங்கங்கள் வலிமையாக உள்ள கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது.

திருவனந்தபுரத்தில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். கேரளாவில் பல இடங்களில் பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் கோல்கத்தாவில் முழு அளவில் போராட்டம் நடைபெறுகிறது. மறியல் போராட்டத்தால் ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் தொழிற்சங்கத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் மோதிக் கொண்டனர். பல இடங்களில் அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதுமட்டுமின்றி அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோலவே ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆங்காங்கே தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x