

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கன்ஹா தேசியப் பூங்காவில் பெண் புலி ஒன்றை, ஆண் புலி கொன்று தின்றது. அச்சமூட்டும் வகையில் நடந்த இந்தச் சம்பவத்தின் பின்னால் எல்லைச் சண்டை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வனத்துறை அதிகாரிகள் பூங்காவினுள் சனிக்கிழமை அன்று முந்திதாதர் சரகப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது குறிப்பிட்ட இடத்தில் ஒரு புலியின் மண்டையோடு, பாதம் உள்ளிட்ட சில பாகங்கள் சிதறிக் கிடந்தன.
இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதுபற்றிப் பேசிய கன்ஹா தேசியப் பூங்கா கள இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, ''கொல்லப்பட்ட புலி பெண் புலியாகவும், அதைக் கொன்றது ஆண் புலியாகவும் இருக்கக்கூடும். இறந்த புலியின் நகம், பற்கள் ஆகியவை சேதம் ஆகாமல் கிடைத்துள்ளன. மிச்சமிருந்த உடல் பாகங்கள் முதற்கட்டப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கு எல்லைச் சண்டை மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஏனெனில் புலி கொல்லப்பட்ட பகுதி நல்ல இரை கிடைக்கும் இடம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்துவருகிறோம்'' என்றார்.
சில நேரங்களில் புலிக்குட்டிகளைப் புலிகள் சாப்பிட்டு விடும். ஆனால் தன் இனத்தைத் தானே கொன்று தின்னும் பழக்கமான இது அரிதினும் அரிதான சம்பவம் என்று கூறப்படுகிறது.
பொதுவாக தான் பிறந்த இடத்தில் இருந்து 200 கி.மீ. தாண்டிச் செல்லும் புலிகள் எல்லைப் போரில் சிக்கிக் கொல்லப்படுவது வழக்கம். ஆனால் கொன்ற புலியையே ஒரு புலி தின்றிருப்பது வனத்துறை தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது.