Last Updated : 20 Jan, 2019 05:51 PM

 

Published : 20 Jan 2019 05:51 PM
Last Updated : 20 Jan 2019 05:51 PM

மண்டலபூஜை முடிந்து சபரிமலை நடை சாத்தப்பட்டது: அரசியல் வார்த்தைப் போர் தொடர்கிறது

சபரிமலையில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் முடிந்ததையடுத்து ஹரிவாரசனம் பாடப்பட்ட ஐயப்பன் கோயில் நடை, இன்று காலை அடைக்கப்பட்டது

67 நாட்கள் நடை திறக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 6.15 மணிக்கு ஐயப்பனுக்கு பாஷ்மாபிஷேகம் செய்யப்பட்டு, பந்தளம் ராஜா குடும்பத்தாரின் பிரதிநிதி ராகவ ராஜா வர்மா தரிசனம் செய்தபின் முறைப்படி நடை சாத்தப்பட்டது. அடுத்து வரும் பிப்ரவரி 13-ம் தேதி மாதப்பிறப்பையொட்டி திறக்கப்படும்.

சபரிமலையில் 50வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்தும், சபரிமலையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தடைகள் ஆகியவற்றை விலக்க வலியுறுத்தி மாநில தலைமைச் செயலகம் முன் கடந்த 49 நாட்களாகப் போராட்டம் நடத்திய பாஜகவினரும் இன்று தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

அப்போது பேசிய பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, “ எங்களின் இந்தப் போராட்டத்தில் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை நாங்கள் பெற்றாலும், நம்பிக்கையைக் காக்க வேண்டும் என்பதற்காக நடந்த இந்தப் போராட்டம் முழுமையாக வெற்றியடையவில்லை. 100சதவீதம் வெற்றி என்று சொல்ல முடியாது. ஐயப்பன் ஆசீர்வாதத்தால், மக்களின் ஆதரவைப் பெற்றோம். பக்தர்கள் மீது 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் “ என்று வலியுறுத்தினார்.

ஆனால், முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் இன்று பேசுகையில், “ சபரிமலையில் இந்த ஆண்டு நடந்த அனைத்துக் குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் சங்பரிவார் அமைப்புகளே காரணம். அவர்களின் போராட்டம் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாகக் கேரள மாநிலம் முழுவதும் பாஜகவினர், இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியே தீருவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அரசு, 50வயதுக்குட்பட்ட பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்தது. பிந்து, கனகதுர்கா ஆகிய இரு 50வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலையில் முதல் முறையாகத் தரிசனம் செய்து திரும்பினார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வன்முறை வெடித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கையில் சபரிமலையில் இந்த ஆண்டு 50வயதுக்குட்பட்ட பெண்கள் 51 பேர் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x