பத்மஸ்ரீ விருதை ஏற்க ஒடிசா முதல்வரின் சகோதரி மறுப்பு

பத்மஸ்ரீ விருதை ஏற்க ஒடிசா முதல்வரின் சகோதரி மறுப்பு
Updated on
2 min read

மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீவிருதை ஏற்க ஒடிசா மாநில முதல்வரின் சகோதரியும், பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான கீதா மேத்தா மறுத்துவிட்டார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் இந்த விருதை நான் ஏற்றுக்கொண்டால், பல்வேறு தவறான யூகங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், தான் இந்த விருதை ஏற்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சிறந்த குடிமகன்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 94 பேருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் ஒடிசா மாநில முதல்வர் நவின் பட்நாயக்கின் சகோதரியும், பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான கீதா மேத்தாவுக்கு பத்மஸ்ரீவிருதை மத்திய அரசு அறிவித்தது.

கீதா மேத்தா தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த புத்தகப் பதிப்பாளர் சோனி மேத்தாவை திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்து வருகிறார். சோனி மேத்தா உலகத் தலைவர்கள் பலரைக் குறித்து ஏராளமான புத்தகங்கள் வெளியிட்டு அது லட்சக்கணக்கில் விற்பனையாகியுள்ளன.

கீதா மேதா ராஜ்(1989), ஸ்நேக்ஸ் அன்ட் லேடர்ஸ், கிளிம்ஸ் ஆப் மார்டன் இந்தியா(1997), இடனர்ல் கணேசா பிரம் பெர்த் டூ ரீபெர்த்(2006) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 14-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள பத்மஸ்ரீவிருதைத் தான் ஏற்க இயலாது என கீதா மேத்தா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''பத்மஸ்ரீவிருதுக்கு நான் தகுதியானவர் என்று கருதி எனக்கு இந்திய அரசு விருது அறிவித்ததை நான் பெருமையாக, கவுரவமாகக் கருதுகிறேன். ஆனால், சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரும் நிலையில், நான் இந்த விருதை நான் கண்டிப்பாக ஏற்க இயலாது. அதற்காக நான் நான வருந்துகிறேன். அவ்வாறு இந்த விருதை நான் ஏற்றால், பல்வேறு தவறான யூகங்களுக்கு நான் வழிவகுத்துவிடும், எனக்கும், ஒடிசா அரசுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். விருதை ஏற்க இயலாமைக்கு வருந்துகிறேன்'' எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மறுத்துவிட்டார். அதேசமயம், பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் மிகப்பெரிய பதிப்பகத்தை நடத்திவரும் சோனி மேத்தா, கீதா மேத்தா ஆகிய இருவரும், கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்து 90 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தினார்கள். ஆனால், என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை. பிரதமர் மோடி குறித்த வாழ்க்கை வரலாற்றை சோனி மேத்தாவின் பதிப்பகம் வெளியிடுவது குறித்து பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசு அறிவித்த விருதை கீதா மேத்தா மறுத்துள்ளது வியப்பை அளித்துள்ளது.

மேலும், தற்போது பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் எடுத்து வருகிறார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் சேர்ந்து 3-வது அணிக்குத் தயாராகி வருகிறார். இந்த சூழலில் விருதை ஏற்றால் பாஜகவை விமர்சிக்க இயலாது என்ற கருதி கீதா மேத்தா விருதை ஏற்க மறுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in