Last Updated : 14 Jan, 2019 09:42 AM

 

Published : 14 Jan 2019 09:42 AM
Last Updated : 14 Jan 2019 09:42 AM

சிவசேனாவை வெல்ல இதுவரை யாரும் பிறக்கவில்லை: அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை வெல்ல இதுவரை யாரும் பிறக்கவில்லை என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆவேசமாகத் தெரிவித்தார்.

சிவசேனாவுடன் கூட்டணி அமைக்காவிட்டால், தேர்தலில் தோற்கடிப்போம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சமீபத்தில் பேசியதற்கு பதிலடியாக உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மும்பை வொர்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நமது மாநிலத்திலேயே நமது கட்சியை தோற்கடிப்போம் என்று ஒருவர் பேசியுள்ளார். அவருக்கு நான் ஒன்று கூறிக்கொள்கிறேன், சிவசேனையைத் தோற்கடிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. இனிமேல் பிறக்கப்போவதுமில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் ஒருவரின் ஆதரவு அலையால் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள், ஆனால், நமது மாநிலத்தில் நமது கட்சிக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு உண்டு. மக்களின் ஆதரவை நீங்கள் ஒருமுறை இழந்துவிட்டால் அனைத்து போர்க்களத்திலும் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டால், ஆட்சியில் இருந்து அகற்றப்படுவீர்கள்.

பாஜகவைப் போல் தேர்தலின்போது மட்டுமே ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பும் கட்சி சிவசேனா அல்ல. ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் சிவசேனா கட்சி எப்போதும் உறுதியாக இருக்கிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் ஏமாற்றியது, மக்கள் அந்த கட்சியை எதிர்க்கட்சியாகக் கூட அங்கீகரிக்காத அளவுக்கு பெருந்தோல்வியை அளித்தனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதைக் கடுமையாக எதிர்க்கும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. இப்படி இருக்கும்போது அவர்களால் எப்படி ராமர் கோயில் கட்ட முடியும்? இது தொடர்பாக பாஜக முதலில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வாங்கு வங்கி அரசியலுக்காக ராமர் கோயில் விஷயத்தைக் கையில் எடுப்பதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தும் ராமர் கோயில் விஷயத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் என்ன செய்தார்கள்?

எங்களைப் பொருத்தவரை அனைவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று பாஜக அளித்த வெற்று வாக்குறுதியைப் போலவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வாக்குறுதியும் அளித்துள்ளது.

உயர்சாதியில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு வருமானவரிவிலக்கு அளிக்க வேண்டும்

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x