

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ தவறாக நடந்துகொண்டதற்காக மனமுடைந்து தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார் மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர்.
பாதிக்கப்பட்ட மருத்துவர் ராஜினாமா செய்ததை அடுத்து மற்ற மருத்துவர்களும் எம்எல்ஏ மன்னிப்பு கேட்காவிட்டால் தாங்கள் அனைவரும் வேலையை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஷாஜகான்பூர் மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனையின் மூத்த சிறப்பு கண் மருத்துவர் ஆர்.பி.ஆர்யா. இவர் தனது ராஜினாமா கடிதத்தை தலைமை மருத்துவ அலுவலர் ஆர்.பி.ராவத்திடம் இன்று சமர்ப்பித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் திரிபாதி கூறுகையில், ''டாக்டர் ஆர்யா தன்னைச் சந்தித்து நடந்த சம்பவத்தைப் பற்றி எழுத்துமூலமாக புகார் ஒன்றை எழுதிக் கொடுத்துள்ளார். விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்படும்'' என்று திரிபாதி தெரிவித்தார்.
மருத்துவ முகாமில் அவமானம்
இதுகுறித்து ராஜினாமா செய்துள்ள மருத்துவர் ஆர்யா தெரிவித்ததாவது:
''நிகோய் பகுதியில் ஒரு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் நானும் கலந்துகொண்டேன். அரசு உதவித்தொகை பெறுவதற்காக ஒரு நபரைப் பரிசோதித்தேன்.
பரிசோதித்த வகையில் அவரது கண்களில் இருந்த 30 சதவீதக் குறைபாட்டையே சான்றிதழில் குறிப்பிட்டு வழங்கினேன்.
அப்போது அங்கு வந்த பாஜக எம்எல்ஏ ரோஷன்லால் வர்மா 40 சதவீத பார்வைக் குறைபாடு என்று எழுதி வேறொரு சான்றிதழ் தயார் செய்து தரும்படி என்னிடம் வலியுறுத்தினார்.
எம்எல்ஏ கேட்டதை நான் மறுத்துவிட்டேன். அப்போது அவர் பகிரங்கமாக என்னை மிரட்டினார். அது மட்டுமின்றி பலர் முன்னிலையிலும் என்னைக் கேவலப்படுத்திப் பேசினார்''.
இவ்வாறு ஆர்யா தெரிவித்தார்.
ஆர்யா ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தபோது, தான் பொது இடத்தில் அவமானத்துடன் என்னால் வேலை செய்ய முடியாது என்றார்.
இதற்கிடையில், மாநில மருத்துவ சேவையின் கூட்டம் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஓ.பி.கவுதம் தலைமையில் இன்று நடந்தது.
அதில் கலந்துகொண்ட மருத்துவர்கள் மூன்று நாட்களுக்குள் நடந்த சம்பவத்திற்கு எம்எல்ஏ ரோஷன்லால் மன்னிப்பு கோர வேண்டும். தவறும் பட்சத்தில் தாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பணியை ராஜினாமா செய்வோம் என்று தெரிவித்தனர்.
ஒரு மூத்த கண் மருத்துவர் பொது இடத்தில் எம்எல்ஏவால் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.