Last Updated : 03 Jan, 2019 01:25 PM

 

Published : 03 Jan 2019 01:25 PM
Last Updated : 03 Jan 2019 01:25 PM

சபரிமலையை போராட்டக் களமாக்கும் சங்பரிவார் அமைப்புகள்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலையை போராட்டக் களமாக மாற்றிவரும் சங்பரிவார் அமைப்புகளை, இரும்புக் கரம் கொண்டு அரசு அடக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், 10வயதுமுதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் வருவதற்கு இந்துஅமைப்புகள், பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த எதிர்ப்புகளை மீறி, நேற்று அதிகாலை பிந்து, கனகதுர்கா ஆகிய இரு 40 வயதுள்ள பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினார்கள். இந்த சம்பவத்தையடுத்து கேரள மாநிலத்தில் இந்து அமைப்புகள், சங்பரிவார் அமைப்புகள், பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சபரிமலையில் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததைக் கண்டித்து, இன்று கேரள மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம்  நடத்த பாஜகவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தை மீறி அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. பல பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

கேரளாவில் நேற்று நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜகவினர் இடையே நடந்த மோதலில் கல்வீச்சில் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவரைச் சிகிச்சை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில், பாஜகவினர், இந்துஅமைப்புகள் போராட்டத்தால் மக்கள் பேருந்துவசதி கிடைக்காமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சபரிமலைக்கு நேற்று இரு பெண்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பி இருக்கிறார்கள். அந்த இரு பெண்கள் வருகைக்கு கோயிலில் அப்போது அங்கிருந்த மற்ற பக்தர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

அந்த இரு பெண்களும் வானத்தில் இருந்து சபரிமலையில் இறக்கப்படவில்லை, வழக்கமான பக்தர்களைப் போல் அனைவரும் செல்லும் பாதையில்தான் அவர்கள் சென்றார்கள். கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்களும் சபரிமலைக்குச் செல்ல இருக்கிறோம், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அதன்பின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் யாருக்கும் தெரியாமல் விமானம் மூலம் வானத்தில் இருந்து இறக்கப்படவில்லை.

இரு பெண்கள் கோயிலுக்குள் நுழைந்ததற்காக இன்று போராட்டம் நடத்துவது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. சபரிமலைக் கோயிலின் தலைமைத் தந்திரி கோயிலின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகக் கூறி பரிகார பூஜை செய்ததும், கோயிலைப்பூட்டியதம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

இதுபோன்ற விஷயங்களை முடிவு செய்ய வேண்டியது தேவஸம்போர்டுதான். ஆனால், தந்திரியின் செயல்பாடு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது மட்டுமல்ல, தேவஸம்போர்டு விதிகளுக்கும் எதிரானதாகும்.

இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றதற்காக சங்பரிவார் அமைப்புகள், பாஜகவினர் சபரிமலையை போராட்டக்களமாக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் நடத்திய போராட்டத்தால், மாநிலம்முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. 79 அரசுப்பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. ஊடகங்களில் பணியாற்றும் பெண்கள் உள்படப் பலர் தாக்கப்பட்டுள்ளனர், 39 போலீஸார் கல்வீச்சில் காயமடைந்துள்ளனர்.

சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. அரசமைப்புச் சட்டத்தின் பொறுப்புகளை அரசு நிறைவேற்றுகிறது. ஆனால், சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினால், அரசுக்கு வேறுவழியில்லை இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x