

''எனக்கு கண்டிப்பாக பாதுகாப்பு வழங்கப்படும் என்று சொல்வார்கள் எனில் நான் டெல்லியை விட்டு வெளியேறி விடுவேன்'' என்று காந்தி சொன்னதை இங்கே நினைவுகூர்கிறார் அவரிடம் தனிச்செயலாளராகப் பணியாற்றிய கல்யாணம்.
கல்யாணம் தமிழகத்தைச் சேர்ந்தவர். தற்போது அவரது வயது 96. இளைஞராக இருந்தபோது பிரிட்டிஷ் அரசு அலுவலகத்தில் பணியாற்றியவர். காந்தியிடம் தனிச்செயலாளராகப் பணியாற்றுவதற்காக அரசு வேலையை விட்டு வெளியே வந்தார். அதன் பிறகு 1943லிருந்து 1948 வரை காந்தியிடம் தனிச்செயலாளராகப் பணியாற்றினார்.
1948 ஜனவரி 30-ல் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நினைவு நாள் தேசிய தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பிடிவாதமான எளிமையே மகாத்மாவின் உயிரை பறித்துக்கொள்ளவும் காரணமாக அமைந்துவிட்டது என்று காந்தி குறித்து கல்யாணம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்கிறார்.
''காந்திஜி இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புகூட டெல்லி அதிகாரிகள் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதை எடுத்துச்சொல்லி எச்சரித்தனர். ஆனால் காந்தி அதை ஏற்கவில்லை. அவர் தனக்கு என்று சிறப்புப் பாதுகாப்பை என்றுமே விரும்பியதில்லை.
அதிகாரிகளிடம் அவர் சொன்னார், ''எனக்கு பாதுகாப்புகள் குறித்து நம்பிக்கையில்லை. நான் பாதுகாப்பை விரும்பவும் இல்லை. எனக்கு பாதுகாப்பு தந்தேயாகவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நான் டெல்லியை விட்டு வெளியேறுவதோடு வேறு எங்காவது சென்றுவிடுவேன்'' என்றார். அந்த அளவுக்கு அவர் இந்த தேசத்தின் மீது பற்று கொண்டவராக இருந்தார்.
உண்மையில், அவர் மட்டும் அன்று பாதுகாப்பை ஏற்றுக்கொண்டிருந்தால், ஆயுதம் மறைத்து எடுத்து வந்த நபரைக் கண்டுபிடித்திருக்கலாம். ஒரு மாபெரும் படுகொலையும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். பிடிவாதமான எளிய வாழ்க்கையே மகாத்மாவின் உயிரைப் பறித்தது.
ஒருமுறை காந்திஜியிடம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர், ''நீங்கள் தேசத்தின் மிகப்பெரிய தலைவர். நீங்கள் டிக்கெட் இல்லாமலே ரயிலில் பயணம் செய்யலாமே'' என்று கேட்டார். ஆனால் காந்தி தனக்கு மட்டுமின்றி தன்னோடு வருபவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துக்கொள்பவராகவே வாழ்ந்தார். இத்தனைக்கும் காந்தி எளிய மக்கள் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு ரயில் பயணத்தையே விரும்பி ஏற்றார்.''
இவ்வாறு காந்தியின் தனிச்செயலர் கல்யாணம் நினைவுகூர்ந்தார்.