Published : 04 Jan 2019 06:45 PM
Last Updated : 04 Jan 2019 06:45 PM

போபர்ஸ் ஊழலால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது; ரஃபேல் பிரதமர் மோடியை மீண்டும் பதவியில் அமர்த்தும் - நிர்மலா சீதாராமன்

‘‘போபர்ஸ் தான் ஊழல், அந்த ஊழலால் அப்போது ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி பதவியை இழந்தார். ஆனால், ரஃபேல் நாட்டின் பாதுகாப்புக்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், ரஃபேல் ஒப்பந்தம் பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும்’’ என மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக மக்களவையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி தனது கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அறையில் இருக்கிறார் என்று கடுமையாகச் சாடினார். ட்விட்டர் மூலம் ரஃபேல் விவகாரத்தில் கேள்விகளை எழுப்பினார்.

இந்தநிலையில் மக்களவையில் இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது  விமானத்தை வாங்க விருப்பவில்லை.

பணம் கிடைக்காது என தெரிந்ததால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளி இந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு பாஜக அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஒப்பந்தம், பேச்சுவார்த்தை என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் தயாராகும். விமானம் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வந்து சேரும். ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

போபர்ஸ் தான் ஊழல், அந்த ஊழலால் அப்போது ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை இழந்தார். ஆனால், ரஃபேல் நாட்டின் பாதுகாப்புக்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், ரஃபேல் ஒப்பந்தம் பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x