Published : 29 Jan 2019 10:25 AM
Last Updated : 29 Jan 2019 10:25 AM

அமித் ஷாவின் ஓஆர்ஓபி கருத்துக்கு ஒமர் அப்துல்லா பதிலடி

காங்கிரஸைப் பொறுத்தவரை ஓஆர்ஓபி (ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்) என்றால் ஒரே ராகுல், ஒரே பிரியங்கா என்று கிண்டல் செய்த பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவருமான ஒமர் அப்துல்லா.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "தேசம் ஓடோமாஸ் (ODOMOS-overdose of only Modi only Shah) தொல்லையால் அவதிப்படுகிறது"  எனப் பதிவிட்டார்.

இந்திய பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது முன்னாள் ராணுவத்தினரின் 43 ஆண்டு கால கோரிக்கையாக இருந்தது. இத்திட்டம் பாஜக அரசால் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "மோடி அரசு, முன்னாள் ராணுவ வீரர்களுக்காக ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. வறுமை குறித்து அதிகமாகப் பேசும் ராகுல், 55 ஆண்டுகளாக ஆட்சி செய்தும்கூட காங்கிரஸ் ஏன் வறுமையை ஒழிக்கவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளாக ராணுவ வீரர்களைக் குறித்து அவர்கள் (காங்கிரஸ்) கவலைப்படவில்லை. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினார். காங்கிரஸைப் பொறுத்தவரை ஓஆர்ஓபி (ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்) என்றால் ஒரே ராகுல், ஒரே பிரியங்கா!'' என விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி வதேராவை நியமித்திருக்கிறார் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி. கடந்த சில ஆண்டுகளாகத் தொண்டர்களால் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் பொறுப்பு பிரியங்காவுக்குத் தரப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் அமித் ஷா காங்கிரஸுக்குத் தெரிந்த ஓஆர்ஓபி எல்லாம் ஒன்லி ராகுல் ஒன்லி பிரியங்கா எனப் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து அமித் ஷாவுக்கு ஒமர் அப்துல்லா ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x