Published : 11 Jan 2019 08:16 AM
Last Updated : 11 Jan 2019 08:16 AM

இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழக மாணவர்: விசா வழங்க மறுத்த குடியுரிமை அதிகாரி

இந்தி தெரியாத காரணத்தால், மும்பை விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை அங்குள்ள குடியுரிமை அதிகாரி அவமதித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் ஆபிரகாம் சாமுவேல் (27). இவர் அமெரிக்காவில் உள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பி.ஹெச்டி படித்து வருகிறார்.

விடுமுறைக்காக மதுரை சென்றிருந்த அவர், மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு வந்துள்ளார்.

பின்னர், அங்குள்ள 33-வது கவுன்ட்டருக்கு சென்ற ஆபிரகாம் சாமுவேல், அங்கிருந்த குடியுரிமை அதிகாரியிடம் விவரங்களை ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

அதற்கு அந்த அதிகாரி, சாமுவேலிடம் இந்தியில் பதிலளித்துள்ளார். அப்போது, தனக்கு இந்தி தெரியாது எனக் கூறிய சாமுவேல், ஆங்கிலத்தில் பேசுமாறு அதிகாரியை பணித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் குடியுரிமை அதிகாரி, "இந்தி தெரியாவிட்டால் தமிழகத்துக்கே திரும்பிச் செல்" என சாமுவேலிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்த குடியுரிமை உயரதிகாரிகளிடம் சாமுவேல் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக விசா வழங்கப்பட்டு விமானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ட்விட்டரில் புகார்

இந்நிலையில், அமெரிக்கா சென்ற சாமுவேல், தனக்கு நேர்ந்த இந்த அவமானம் குறித்து ட்விட்டரில் தொடர்ந்து பதிவுகளை நேற்று வெளியிட்டார். மேலும், அந்தப் பதிவுகளை பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். அந்த பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:

மும்பை சத்ரபதி விமான நிலையத்தில், இந்தி தெரியாது என்பதற்காக என்னை குடியுரிமை அதிகாரி ஒருவர் அவமதித்தார். இந்தியில் பேச முடியாததற்காக அவர் என்னிடம் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து மும்பை விமான நிலைய உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு தமது பதிவில் சாமுவேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந் தப்பட்ட குடியுரிமை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டி ருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தச் சம்பவம் குறித்து மும்பை சிறப்பு போலீஸ் பிரிவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x