

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான பெண்கள் இருவர் இன்று அதிகாலை சென்று தரிசனம் செய்த நிலையில், கேரள அரசைக் கண்டித்து அங்கு மீ்ண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம் உட்பட பல இடங்களில் நடந்த போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுத்தி பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
சபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயனும், போலீஸாரும் 50 வயதுக்குட்பட்ட பெண்களை யாருக்கும் தெரியாமல் அதிகாலை வேலையில் சபரிமலைக்கு அழைத்துச் சென்றதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதைத்தொடர்ந்து, கேரள அரசைக் கண்டித்தும் அங்கு மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பாஜக மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் நடந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போலீஸார் கூட்டத்தினரை விரட்டியடித்தனர்.
இதுபோலவே, தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனையும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். கேரள அரசைக் கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.