

உ.பி.யில் மக்களவைத் தேர்தலில் பிரகதீஷல் சமாஜ் கட்சி (லோகியா)யின் தலைவர் ஷிவ்பால்சிங் யாதவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகிறது. சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் சகோதரரான இவர், அக்கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கியவர்.
உ.பி.யின் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் மாயாவதியும், அகிலேஷ் சிங் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர். இதில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸை தள்ளி வைத்தனர்.
இதனால், தனித்து விடப்பட்ட காங்கிரஸ் உ.பி.யின் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருப்பதாக கூறி இருந்தது. இதை எந்த நிபந்தனைகளும் இன்றி ஏற்க முன்வந்த ஷிவ்பாலுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகிறது.
உ.பி.யில் உருவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை வலுவிழக்கச் செய்ய புதிய கட்சி தொடங்கியதாக ஷிவ்பால் மீது புகார் உள்ளது. இதை ஷிவ்பால், பாஜக அளிக்கும் யோசனையின் பெயரில் செய்வதாகவும் காங்கிரஸ் புகார் கூறி வந்தது. இந்நிலையில், வேறுவழியின்றி ஷிவ்பாலுடன் கூட்டணி வைக்கும் நிலைக்கு காங்கிரஸ் உ.பி.யில் தள்ளப்பட்டு விட்டது இதற்கு அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆதரவளித்துள்ளனர்.
இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''ஷிவ்பால், பாஜகவுடன் ரகசிய நட்பு கொண்டவர் என்றிருந்த ஒரு கருத்து போலவே, அகிலேஷ் நமது நண்பர் எனக் கருதினோம். தற்போது அகிலேஷைப் போல் ஷிவ்பாலும் எதிர்திசையில் திரும்பி நம்முடன் வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர்.
யாருக்கு பலன் அதிகம்?
இந்தக் கூட்டணியால் காங்கிரஸை விட ஷிவ்பாலுக்கு பலன் அதிகம் எனக் கருதப்படுகிறது. அதேசமயம், ஷிவ்பால் கட்சியால் அகிலேஷ் மற்றும் மாயாவதி கூட்டணிக்கு சில ஆயிரம் வாக்குகளுடன் இழப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளன.