

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் சுமார் 1000 சீன ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்துள்ளனர்.
சீன அதிபர் ஜீ ஜிங்பிங் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் எல்லைப் பிரச்சினை குறித்து முதல் கட்ட ஆலோசனை நடத்தவுள்ள சூழலிலும் சீன வீரர்கள் அத்துமீறியுள்ளது கவனிக்கத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான லடாக்கில் உள்ள சுமூர் நிலை அருகே சுமார் 1000 சீன ராணுவத்தினர் அத்துமீறி உள்ளே நுழைந்து, அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சீனப் படையினரின் அத்துமீறலின் தொடர்ச்சியாக, எல்லைப் பகுதிக்கு 3 பட்டாலியன்களை அவசரநிலையில் அனுப்பியுள்ளது.
முன்னதாக, இந்திய எல்லைக் கட்டுபாட்டு பகுதியை மீறி, சீனப் படைகள் அவ்வப்போது ஊடுருவுவது குறித்து இரு நாட்டு ராணுவ தரப்பிலும் நேற்று கொடி அமர்வு கூட்டம் நடத்தி விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.